என் முதலாளி அம்மா.
என் முதலாளி அம்மா
இருக்கும் வீட்டினிலே
பன்னிரண்டு அறைகள்
கூட்டிக் கழுவ வேண்டும்
தேங்காய்ப் பூ துவாலையில்
தேங்கிடும் தண்ணீரை
தேடிப் பிடித்து நிதம்
துடைத்து எடுத்திடனும்
பாங்காய் பகலுணவை
பள்ளிக்குச் செல்வோர்க்கு
பலவிதமாய் செய்து விட்டு
வாங்காத திட்டெல்லாம்
வாங்கித் தீர வேண்டும்.
ஒவ்வொருவர் ஒரு பள்ளி
வெவ்வேறு திசை சென்று
அவரவரை விட்டு விட்டு
அரை மணியில் திரும்பிடனும்;.
சங்கிலிதனில் கட்டி
சதா குரைக்கும் நாயதனை
இங்குமங்கும் நடை பயில
நானுமுடன் நடந்திடனும்;
மதிய உணவுதனை
முதலாளி சொற்படியே
புதிய வகை வகையாக
புதுமைகள் செய்திடனும்;
மாலையில் திரும்பி வரும்
மாப்பிள்ளைச் செல்வங்களை
காலை போலச் சென்று
கூட்டி வர வேணும்.
இரவு உணவாக
இல்லாத பலகாரம்
பரந்த பல கடையேறி
வாங்கி வர வேணும்.
”அம்மா முதலாளி அம்மா
என்னால் இது முடியவில்லை
சும்மா விடு என்னையென”
சோகத்தில் சொல்லி விட்டால்
“அன்பே, என் ஆருயிரே
பண்பான கணவன் நீர்
என்றென்னை அணைத்து
அவர் சொல்லிடுவார்
என் அன்பான
முதலாளி அம்மா.
.

