ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு

செல்லமே அச்சு வெல்லமே
துள்ளுமே என் உள்ளமே
பொங்குமே இன்பம் தங்குமே
சிந்துமே தேன் சிந்துமே.!
````````
விஞ்சுமே மழலை மொழி தஞ்சமே
கொஞ்சுமே மனதில் துஞ்சுமே
அஞ்சுமே அஞ்சுகம் அஞ்சுமே
கொஞ்சமே உன்மொழி கேட்டுக் கெஞ்சுமே.!
```````````
முத்தேதும் முளைக்காத
பொக்கையில் நீ நகைக்கையில்
சொக்குமே மனமே சிக்குமே
சொர்க்கமும் பக்கமே வந்து நிற்குமே..!
``````
தத்தித் தவழ்வாய் தரை மேடை
தத்தக்கா புத்தக்கா பழகு நடை
அச்சச்சோ அதை பார்க்கவோ
கொடுத்தான் பார்வையின் கொடை.!
`````````
சிரித்தால் சிலிர்க்குமே நெஞ்சம்
அழுதாலும் அதுகூட ஓர் சந்தம்
செல்லமே நீ அடம் பிடிக்கும் பாப்பாடா
வெல்லமே நான் அதைப் பொறுக்கும் அப்பாடா..!
````````
அம்ம்ம்ம்...என்றால் அம்மாவா..?
அப்ப்ப்ப்ப்.....என்றால் அப்பாவா...?
ஹ்ம்ம்ம்.....என்றால் ஆமாவா...?
ஹூஹும்..என்றால் இல்லையா..?
````````
உலகின் எல்லா மொழியையும்
உன் மழலை அகராதியில்
அர்த்தம் தேட வைப்பாயே
சொற்கொண்டு கற்கண்டு தருவாயே..!
```````
கவலை களைவாய் உன் சிரிப்பில்
சோர்வை போக்குவாய் உன் குறும்பில்
என்னையும் குழந்தையாக்குவாய்
உன்னோடு விளையாடுகையில்..!
````````
மனிதரில் மாண்பே மழலைப் பருவம்
என்ன நான் செய்தேனோ பெருந் தவம்
ஆனந்த அதிர்வுகளில் என் அகம்
அடடா.....அடடா.....என்னே சுகம்...!!!!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (11-Dec-12, 8:11 am)
பார்வை : 501

மேலே