புத்தாக்கம்

சிறுகதை: புத்தாக்கம் 12.12.2012
வே.ம.அருச்சுணன் – மலேசியா
"கண்ணா....! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!”
“எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல கோபி. !”
“உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா.......!”
“கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?”
“மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு. ஆனா,நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!”
“சந்தர்பச் சூழ்நிலையாலக் கூடாதவர்களோடுக் கூடி ஏதோ ஓர் உணர்வுல உனக்கு எதிரா ஒரு தப்புச் செஞ்சிட்டேன்!”
“நீ செஞ்சத் தப்புனால அநியாயமாகத் தலைவர் தேர்தல்ல நான் தோற்றுப் போயிட்டேன்.அதனால நான் அடைஞ்ச அவமானம் கொஞ்சம் நஞ்சமில்ல கண்ணா!”
“கோபி.....நான் குமாரை நம்பி ஓட்டுப் போட்டதுக்கு,எனக்கு நல்ல பாடம் கிடைச்சது.தேர்தல்ல ஜெயித்தவுடனே,தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அவன் காற்றில் பறக்கவிட்டுட்டான் கோபி!
“அவனுக்கு இலாபம் தரக்கூடியக் காரியங்களை மட்டும்தான் அவன் செய்தான்.அவனோடு ஒத்து ஊதுரவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான்.நான் சொன்ன எதையும் அவன் காதுல வாங்கிக் கொள்ளவே இல்ல!”
“இது தெரிந்த விசியம்தானே கண்ணா!”
“பழசப் பேசி எந்தப் பயனும் இல்ல. கோபி....அடுத்த வாரம் நடக்கப் போற தேர்தல் பற்றி பேசுவோம்.நான் முழுமையா இறங்கி உனக்கு வேலை செய்யிறேன்!”
“கண்ணா....உன்னை நான் முழுமையா நம்புறேன்.சரி உன்னோட ஆளுங்கக்கிட்ட என்னைப்பற்றி சொல்லிவை!”
“கோபி, நீ ஒன்னும் கவலைப்படாதே. அதை நான் கவனிச்சுக்கிறேன்!” வார்த்தையில் எந்தவொரு பிசிருமின்றி தெளிவுடன் கூறுகிறான்.
“இந்த ஆண்டுத் தேர்தல்ல நான் தலைவருக்கு நிற்கிறேன்,கண்ணா.... நீ தான் என் செயலாளர்.என்ன.....நான் சொல்றது விளங்குதா....?” கோபியின் பேச்சில் உறுதிப்பாடு மேவி இருந்தது!
கண்ணன் ஏதும் பேசாமல் அமைதி காக்கிறான்.
“நிர்வாகத்தைப் பிடிச்சிட்டப் பிறகு நான் என்ன செய்யிறேன்னு நீ பொறுத்திருந்து பாரு கண்ணா! நான் ஒருவன் இருப்பதையே, பதவியில இருக்கிறவனுங்க மறந்துட்டானுங்க இல்லே?”
“பதவியில இருந்தா...பயனானக் காரியங்களப் பொதுமக்களுக்குச் செய்யனும்.இல்லாட்டிப் பதவிய செய்றவங்கக் கிட்டக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கனும்.தானும் செய்யாம பிறரையும் செய்யவிடாம தடுக்கிறது சரியில்ல.என்ன கண்ணா நான் சொல்றது சரிதானே?”
“நீ சொல்றது முற்றிலும் உண்மைதான் கோபி!”
“ஐந்து வருசத்துக்கு முன்னாடி எப்படியெல்லாமோ சிரமப்பட்டு இந்தக் கூட்டுறவுக்கழத்தை ஆரம்பிச்சேன். இன்றைக்குப் பொடிப்பயல்கள் எல்லாம் தலைவனா ஆயிட்டு யாரையும் மதிக்காம விருப்பம் போல கூட்டுறவுச் சங்கத்தை நடத்திட்கிட்டுப் பொதுக்காசுல மஞ்சள் குளிக்கிறான்கள் இல்ல? இந்த ஆண்டு அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன் பாரு!" சிங்கம் போல் கர்ஜிக்கிறான் கோபு.
நடைபெறவிருக்கும் கூட்டுறவுச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு வாக்கு வேட்டையாடிக் கொண்டிருந்தான்.கடந்த ஆண்டு தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய கோபு. கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பணம் இருக்கு ஆனா நினைத்தபடி பந்தா காட்டப் பதவி இல்லையே?
கை நழுவிப்போன பதவியை இந்த ஆண்டு கைப்பற்றுவதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் சரி இரண்டிலொன்று பார்த்து விடுவதென்ற முனைப்புடன் செயல் படுவதில் மின்னலையும் மிஞ்சிக்கொண்டிருந்தான் கோபு.
சீன உணவகத்தில் கோபு விருந்து வைக்கிறான். பத்து இளைஞர்கள் புடைசூழ கோபி தலைமையில் பல்வேறு உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றனர்.குடித்துக் காலி செய்யப்பட்ட மதுபானப் புட்டிகள் மேசை மீது அச்சமூட்டும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“தலைவரே..... நாங்க இருக்கிற வரைக்கும் நீங்க எதுக்கும் பயப்படவேண்டாம்....! உயிரைக்கொடுத்தாவது உங்களை ஜெயிக்க வைக்கிறோம்......!” தன்னை மறந்த நிலையில் வீரவசனம் பேசுகிறான் வேலை வெட்டி எதுக்கும் போவாத அபிமன்யு என்ற அபி.
மிக அட்டகாசமான முறையில் அவர்களிடையே உரையாடல்கள் அமைந்திருந்தன.அங்கிருந்த பத்து பேர்கள்தாம் கோபியின் மெய்க்காவலர்கள்; நம்பிக்கைக்குரியவர்கள். அவனது பாதுகாப்புக்கு அவர்கள்தாம் உத்தரவாதம் என்பதைக் கோபி பெருமையுடன் கூறிக்கொள்வான். அப்படிக் கூறிக்கொள்வது அவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தரும் விசியமாகும்.
இரவு மணி பத்தைக் கடந்து கொண்டிருந்தது.உணவகத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எனினும் கோபியின் மேசையில் மட்டும் சத்தத்திற்குக் குறைவில்லாமல் ஆரவாரமாக இருந்தது. அவர்கள் யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப் படாமல் பேசி அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்தனர். தங்களை மறந்து அவர்கள் வேறு உலகத்தில் உலா வந்து கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் கண்ணாவும் இடம் பெற்றிருந்தான்.கோபிக்கு கண்ணாவின் மீது சிறிது வருத்தம் இருந்தது.பால்ய நண்பனான அவனைப் பெரிதும் நம்பியிருந்தான்.ஆனால்,கடந்த ஆண்டுத்தேர்தலில் எதிரணியில் இருந்து கொண்டு செயல் பட்டதாலேயே தனக்குத் தோல்வி ஏற்பட்டதாகக் கருதினான்.ஓரளவுக்கு அது உண்மையும் கூட. மக்களிடையே அவனுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கவே செய்தது.சங்கம் அமைக்கும் போதெல்லாம் கூடவே இருந்தவன் என்பதால் கண்ணாவின் பலத்தையும் பலவீனத்தையும் கோபி நன்கு அறிந்து வைத்திருந்தான். அவன் தன்னுடன் இருப்பதால் வெற்றி தேவதை தன் பக்கம் என்று மனதில் உருவேற்றிருந்தான்.
அதன் எதிரொலிதான்,கண்ணா கோபியின் நம்பிக்கைக்குரிய அணியில் தலைமைப்பீடத்தில் வீற்றிருந்தான்.எனினும் கோபியிடம் எதையும் சொல்லிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான் கண்ணா.சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இல்லை என்பதால் கண்ணா அமைதி காத்தான்.கோபியிடம் பணம் இருந்தது. உலோக வியாபாரத்தில் கணிசமான வருமானம் வந்துகொண்டிருந்தது.பணம் பத்தும் செய்யும் என்பது கோபியின் திடமான நம்பிக்கை! முக்கியமான நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டதால் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கிறான்.
தேனுண்ட வண்டாய் விருந்தில் கலந்து கொண்டவர்கள் ஏதேதோ பேசி கோபியை மனம் குளிர வைத்துக் கொண்டிருந்தனர்.கண்ணா மட்டும் ஏதும் பேசாமல் இருந்தது கோபிக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.
“என்ன கண்ணா....... மௌனச் சாமியாரா வாயே திறக்காம இருக்கிறே? ஏதாச்சும்பேசு....!” கிளாசிலுள்ள மதுவை லாவகமாக அருந்தியவன் மேல் உதடில் ஒட்டிக் கொண்டிருந்த பீரின் நுரையை நாக்கால் துடைத்துக் கொள்கிறான். கண்ணாவைப் பேச வைக்க கோபி முனைகிறான். கண்ணன் மட்டுமே அந்தக் கூட்டத்தில் மதுவைத் தொடாதவன்.
“கோபி....நான் சொல்றதக் கவனமாகக் கேளு....!” கண்ணாவின் ஆழ்ந்த பீடிகையைக் கேட்டு ஏறியிருந்த அவனது மதுவின் போதை கிர்ரென்று இறங்கியது!
“ கண்ணா.... நீ என்ன சொல்ல வர்ர....?”
“ கோபி....போட்டி கடுமையா இருக்கும் போல. இப்ப இருக்கிற நிர்வாகம் மிகவும் கடுமையா தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டிருக்கிறதா காற்று வாக்கில் எனக்குச் சேதி வந்திச்சு. நமது தேர்தல் வெற்றிக்காக, இன்னும் கடுமையா உழைக்க வேண்டியிருக்கு!”
“கண்ணா.....பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கேளு நான் கொடுத்திடுறேன். இன்னும் யாரைப் பார்க்க வேண்டுமோ சொல்லு. இப்பவே போய்ப் பார்க்கலாம்!”
“சரி...மெய்யப்பன் செட்டியாரைப் போய்ப் பார்க்கலாம் வா. அவர் மனசு வச்சா நிச்சயமா கணிசமான ஓட்டைத் திரட்டிடலாம்!”
‘ஒன் மலேசியா’ பேரங்காடி உரிமையாளர் என்ற முறையில் அவர் பலருக்கு நல்ல அறிமுகம். கண்ணா சொன்னது போல் அவருக்குச் செல்வாக்கும் இருக்கவே செய்தது! அடுத்த சில நிமிடங்களில் அவரைத் தேடி படையுடன் கோபி புறப்படுகிறான்.
“என்னப்பா கோபி இந்த நேரத்தில...?”

“ஏதும் தவறா நினைக்காதிங்க செட்டியாரே...!” தயக்கமுடன்.
“தப்பா நான் ஏதும் நினைக்கில....,வந்த விசியத்தச் சட்டுப்புட்டுன்னு சொல்லு கோபி!” அவசரப்படுத்தினார் செட்டியார்.
“நாளைக்கு நடக்கப் போற, ‘நாம் தமிழர்’ கூட்டுறவுக் கழகத் தேர்தல்ல உங்க ஆதரவை எனக்குத் தரனும்.அதோட....மற்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுத்தரனும்!” காலில் விழாதக்குறையாக மிகவும் தாழ்ந்த குரலில் பேசினான்.
“கவலைப் படாமப் போ கோபி! என்னை நம்பி வந்தவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்வேனுன்னு உனக்கு நல்லாவே தெரியுமே.நிச்சயாமா நம்ம ஓட்டு உனக்குதான்!”
சற்றும் எதிர்பார்க்காத வகையில் செட்டியாரின் ஆதரவு கிடைக்கப்பட்டதால் தனது வெற்றியை இனி யாரும் தடுக்க இயலாது என நம்பினான்.
மறுநாள், விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில், கோபி தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் நடக்கும் இடத்திற்குச் செல்கிறான். மக்கள் கூட்டத்தால் மண்டபம் நிறைந்து வழிந்தது.அக்கூட்டத்தில் அநேககர் தமது ஆதரவாளர்களாகத் தென்படுவதைக்கண்டு கோபி மிகுந்த உற்சாகமுடன் அவர்களோடு கைகொடுத்து மகிழ்கிறான்.
எதிர்பார்த்தது போல் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக யாரும் எதிர்பார்க்காத நிலையில் மூன்று அணிகள் போட்டியில் களமிறங்கின!
புதுமுகமாகப் போட்டியிட்ட, பொருளாதார வல்லுநர் திருமதி அஞ்சலை ஆறுமுகம் போட்டியில் இறங்குகிறார். போட்டியிட்ட முன்னாள் தலைவர்கள் இருவரும் அதிகப் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அவரிடம் தோல்வியைத் தழுவியது, காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை விரும்பிய இளையோரின் கை ஓங்கி நின்றது தெளிவாகத் தெரிந்தது!

முற்றும்

எழுதியவர் : வே (12-Dec-12, 8:46 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 120

மேலே