நீலவண்ணக் கண்ணா வாடா ...!
![](https://eluthu.com/images/loading.gif)
நீயே
நீலவண்ணக் கண்ணா...,
நீக்கமற காதலைப் பரப்பி
நீங்காமல் நிற்கும் மணிவண்ணா...!
மண்ணுண்ட
மாதுளை இதழ்திறப்பில்...,
மலர்ந்தது அண்டசராசரங்கள்
மாய்மாலங்கள் புரியும் மாலவனே...!
காதல்மொழி
காதினில் பேசியே...,
கன்னியுள்ளம் கவர்வாயே
கனவுகள் கண்நிறைய தருவாயே...!
குழல் பிடித்து
குரல் வளைத்து...,
குழந்தையாய் மாற்றி
குறும்புகள் செய்ய ரசிப்பேனே...!
காற்றினில்
கலந்த நின் கீதம்
கேட்டுவிட நெகிழ்ந்து...,
கேவலுடன் நான் துடிப்பேனே...!
வேடிக்கை
வேண்டாம் நவநீதா...,
வேண்டுகின்றேன் உன் வரவு
வேதனைகள் தீர்க்க வருவாயே...!
இதயமொன்று..,
இரங்கற்பா இயற்றி
இருண்மையாய்க் கிடக்கிறது..,
இரக்கங்கள் காட்டிடுவாய் தூயவனே..!
மதுராவில்
மறைந்து நிறைந்தவனே..,
மங்கையிவள் உன்னைத்தேடும்
மறுபிறவி கொண்ட ராதையானேனே...!
மயில்பீலியால்
மையல் தந்த மன்னவனே..,
மனமொடு பேசும் கதைகளால்
மலர்ந்திடுவேன் பூவாய் மணமுடனே...!
உலகெல்லாம்
உன் குரல் கேட்கிறது
உள்ளன்பனே எனக்கு மட்டும்...,
உறவாடும் காலங்களைத் தந்துவிடு..!