அனாதைகள்
உச்சரிப்பதற்கு உதடுகள் கூட
ஒட்டவில்லை அப்படி அழைத்திட !
அன்னமின்றி ஆடையின்றி
வீதிகளில் வினாக்குறிகளாய்
உலவிடும் உடமையிலா உயிர்கள்
உள்ளத்தை உருக்கிடும் உருவங்கள் !
யாரோ இருவரின் இன்பத்தில்
கருவாகி உருவாகி உடலாகி
தெருவோர தொட்டியிலும்
பூங்காவிலும் புதர் செடியிலும்
வீசிஎறிந்த விளைந்தப் பயிர்களே
ஆதரவு அற்ற அனாதைகள் !
வறுமைப் புயலில் சிக்கியதால்
விரக்தியின் விளிம்பில் சென்றதால்
வாழ வழியின்றித் தவிப்பதால்
மாற்று வழியின்றி மனதைக்
கல்லாக்கி கைவிட்ட கன்றுகளே
பெற்றவரைத் தெரியா பிள்ளைகள் !
இச்சையால் இணையும் இருவர்
கொச்சைப் படுத்தும் விதமாய்
பச்சை உயிரென்று பாராமல்
எச்சில் இலைகளின் மத்தியில்
எறிந்து சென்றிடும் கொடியோர்
எரியும் நெருப்பைவிட தீயோர் !
அன்பு கொண்ட நெஞ்சங்கள்
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள்
ஆணைப் பிறப்பிக்கும் அரசாங்கம்
ஆதரவு அளிக்கும் இயக்கங்கள்
அணி அமைத்து வழி வகுத்தால்
அநாதை சொல்லே அகராதியில் இராது !
பழனி குமார்