இரண்டு இட்லி கொடுப்பா...!
வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் காலமே நாம் வாழும் காலத்திலேயே பதில் சொல்லி விடுகிறது. நம்முடைய அன்றாட நெரிசலில் சிக்கி கொண்டு அந்த இரைச்சலில் காலத்தின் பதிலை கேட்காமலும், கவனிக்காமலும்தான் விட்டு விடுகிறோமே தவிர.....காலம் பதில் சொல்லாமல் எப்போது இருந்ததில்லை.
சின்ன வயதில் எப்போதும் ஏதாவது கேட்டு பெற்றோர்களை நச்சரிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது....எல்லா நேரங்களிலும் நாம் கேட்டது கிடைப்பதில்லை... மிகைப்பட்ட நேரங்களில் மறுக்கப்பட்டிருக்கிறது... அதனால் நிறைய கோபம் அப்பா அம்மா மேல வரும். எனக்கு அப்படித்தான்.....அப்ப செய்யும் எந்த செயலும் அர்த்தம் விளங்காமல்... கோபம் வரும்.
'எதுக்கு 10 ஃபேன் போட்டுகிட்டு படுக்கணும்... பெட்ரூம்ல ஒரு பேன் ஹால்ல ஒரு ஃபேன்னு....? அந்த ஃபேன ஆஃப் பண்ணு...இந்த லைட்ட ஆஃப் பண்ணு' னு ஏன் இப்படி தொல்ல பண்றாரு...? மனுசனுக்கு வாழ்க்கைய வாழவே தெரியல.. எப்போ பாத்தாலும் கஞ்சத்தனம்தான்... ! அம்மாகிட்ட கூட...'ஏன் இவ்வளவு பழைய சாதம் மிஞ்சுது? கொஞ்சமா சாதம் செய்யக்கூடாதா' என்று நாங்கள் எல்லாம் இட்லி சாப்பிடும் போது..... அவர் அந்த பழைய சாதத்தை சாப்பிடும் போது பத்திகிட்டுதான் வரும்...ஏன் தான் வாழ்க்கையை வாழாம இப்படி எல்லாம் இருக்காரோ என்று.....
ஒரு நாள் நாங்க தீபாவளிக்கு ஜவுளி எடுத்துட்டு ....இரவு நேரமாச்சு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு போகலாம்னு முடிவெடுத்தோம்..என்னோட அந்த 15 வயசிலும் ஹோட்டலுக்கு போறதுன்னா ஒரு சந்தோசம் தான்..... ஆர்டர் எடுக்க ஆளு வந்தாரு... நானும் அக்காவும் போட்டி போட்டு கிட்டு...எனக்கு ஒரு பூரி செட்டு அப்புறம் ஒரு மசாலா தோசைன்னு ...அக்காவும் அம்மாவும் ஏதேதோ ஆர்டர் செய்ய....பேரர் அப்பா முகத்தை பார்த்து, 'என்ன வேண்டும்' என்று கேட்பார்....அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது...எங்களுக்கு .....மில்லியன் டாலர் கேள்வி....ஒண்ணும் வேணாம்னு வழக்கம் போல சொன்னாலும் நானும் அம்மாவும் அக்காவும் விடுவதாயில்லை....எப்பவாச்சும் தானே ஹோட்டலுக்கு வர்றோம்...ஏதாவது ஆர்டர் பண்ணுங்கனு ஃபிரசர் கொடுக்க....கடைசியில் வேறு வழியில்லாமல்.....
" இரண்டு இட்லி கொடுப்பா...."
ச்சே......என்ன இவர் இவ்வளவு உணவு வகை இருந்தாலும்...கஞ்சத்தனமாக மீண்டும் ரெண்டு இட்லியோடு போதும்னு சொல்றாரே....என்று நினைத்தாலும்.... நாம பூரி செட்ட ஒரு வெட்டு வெட்டுவோம் என்ற ஆர்வத்தில் ....உப்பலான அந்த சூடான பூரியின் வருகைக்காக காதலோடு காத்திருந்தேன்...
காலங்கள் உருண்டோடியது
ஒரு கணத்தில் நிகழ்ந்து விட்டது....அந்தக் காட்சி மாற்றம் என்னை துபாயில் கொண்டு வந்து விட்டு விட்டது...
ஒரு நாள் நானும் எனது மனைவியும் 5 வயது எனது மகளும் மாதக் கடைசியான ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கோவிலுக்கு சென்று விட்டு.....திரும்பும் போது....ஹோட்டலில் சென்று சாப்பிடலாம் என்று மகளும் மனைவியும் வற்புறுத்த.....வேண்டாம் என்று என் பர்சில் இருந்த 100 திர்ஹம்ஸ் என்னிடம் ரகசியமாய் சொல்ல...
நான் வீட்டில் போய் சாப்பிடலாம் என்று சொன்னதற்கு மனைவியும் மகளும் ....அப்படி மிச்சம் பிடித்து என்ன செய்யப்போகிறோம் என்று சொல்ல....விளைவு....வசந்த பவன் டேபிளில்....இரண்டு பேருக்கும் பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்தாகிவிட்டது.....பேரர்...என் முகத்தைப் பார்க்க....பர்ஸில் இருந்த 100 திர்ஹம்ஸ் மிரட்ட ஆரம்பித்தது...மாதக் கடைசி வேறு......வேறு ஏதேனும் செலவு 2, மூணு நாளில் வந்தால் என்ன செய்வது....என்ற அந்த மிரட்டலுக்கு அடி பணிந்து.......எனக்கு எதும் வேண்டாம்மா... நீங்க சாப்பிடுங்க என்று மறுத்தேன்........
அட.....எப்பவாச்சும் தானே ஹோட்டலுக்கு வர்றோம்...ஏங்க இப்படி என்று..... மனைவியும்....டாடி...ஏன் டாடி இப்படி இருக்கீங்க..... பூரி செட் சாப்பிடுங்க என்று 5 வயது என் மகளும் வற்புறுத்த.....பர்ஸில் இருந்த 100 திர்ஹம்ஸின் மிரட்டலுக்கு பணிந்த படி.....மெல்ல சொன்னேன்........
" இரண்டு இட்லி கொடுப்பா...."
அப்பாவின்....கடந்த கால எல்லா செயலும் அர்த்தம் பொதிந்ததாய் என் கண் முன் வர....மொபைல் போனை எடுத்து....ஊருக்கு போன் செய்தேன், அப்பாவிற்கு,,,,, அப்பா மறுமுனைக்கு வர.....என்ன தேவா எப்படியிருக்க....என்று கேட்பற்கு முன்னாலேயே தழு தழுத்த குரலில் சொன்னேன்...
"என்னை மன்னிச்சுடுங்கப்பா....என்று....... " அவருக்கு ஏன் அந்த மன்னிப்பு என்று புரிந்திருக்காது....ஆனால்....இதைப்படிக்கும் வளரும் பிள்ளைகளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.