முதுமைக்கு வந்தனம்

நான் அரசு அதிகாரி.என் மனைவியும் அரசு அதிகாரி.எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க.அப்பா தமிழ் வாத்தியார்.ஒய்வு பெற்று இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்டன...
அட போங்க...இவ்வளவும் சொன்ன நான் என் பெயர் சொல்ல மறந்துட்டேன் பார்த்தீங்களா? சிரமப்பட்டு எங்க அப்பா எனக்கு வைச்ச பெயர் மாணிக்கம்.
அப்பா ஆறுமுகம் ஒய்வு பெற்றதிலிருந்து என் பராமரிப்புல தான் வாழ்ந்து வந்தாரு.இரண்டு நாளைக்கு முன்னால தான் அவரோட எண்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் வந்தது.என்னனே தெரியல.நல்லா தான் கவனிசுக்கிட்டு இருந்த என் மனைவி கடந்த ரெண்டு வருடமாவே அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்க்கணும்.அதுதான் நல்லதுன்னு அவ்வப்போது சொல்லிகிட்டே வந்தா.நானும் ஒவ்வொருமுறையும் தட்டி கழிச்சுகிட்டே இருந்தேன்.
அப்பாவுக்கு முதுமை அதிகமாயிட்டு .கட்டிலை விட்டு எழுந்து நடப்பதே கடினமாகி படுக்கையிலே காலத்தை போக்க ஆரம்பிச்சுட்டார். இப்பதான் நானும் முதன்முதலா முதியோர் இல்லத்துல அப்பாவை சேர்க்கறத பத்தி யோசிச்சி முடிவெடுத்தேன்.
என் மனைவியும் ஆமாங்க,இப்பவாவது புரிஞ்சிகிட்டீங்களே! நாம ரெண்டு பேரும் நிம்மதியா ஆபீஸ் போகணும்னா உங்க அப்பா முதியோர் இல்லத்துல இருக்கணும்.இல்லன்னா ஆண்டவன்கிட்டே போகணும்னு சொன்னா!
அவ சொன்னதுல என்ன தப்பிருக்கு?எல்லாரும் ஒருநாள் அங்குதான போயகனும்னு நானும் நினைச்சிகிட்டேன்.
அப்பாகிட்ட இதையெல்லாம் எடுத்து சொல்லி ஒப்புதல் வாங்குங்கன்னா மனைவி. அப்பாகிட்ட உடனே பேசனும்னு முடிவு பண்ணிக்கிட்டு நானும் பேச்சுவார்த்தைக்கு தயாரா இருந்த சமயம்.....வீட்டு காலிங் பெல் அடித்தது.யாரது? என விசாரித்துக் கொண்டே வெளியே வந்தால் நன்கு பரிச்சயப்பட்ட கூரியர் பையன் நின்னான்.
சார் கவர்னு நீட்டினான்.அப்பா பெயரில் வந்த அந்த கவருக்குள் அவரது பழைய மாணவன் குமரன் பிறந்த நாள் வணக்கங்களுடன் எழுதிய கடிதம் இருந்தது.
அப்பாவிடம் சொல்லி கடிதத்தை கொடுத்தேன்.அப்பா படிச்சுப் பார்த்து சொன்னார். டே....மாணிக்கம்! குமரன் படிச்ச காலத்திலிருந்து முப்பது வருசமா என் பிறந்தநாளை மறக்காம நேரிலோ ,கடிதம் மூலமோ சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான் .என்னோட தள்ளாத வயசுல அவன் இந்த கடிதம் மூலமா காட்டுன அன்பு இருக்கே! அது என்னை இன்னும் நூறு வருஷம் ஆரோக்கியமா வாழ வைக்கும்டா....என்று சொல்லி குழந்தை போல குதூகலித்தார்.....
அதைப் பார்த்த என் மனசு ரொம்பவே அல்லாடி தள்ளாடிப் போச்சுங்க! அப்பாகிட்ட எத்தனையோ ஆயிரம் பேர் படிச்சிருப்பாங்க. அதுல ஒருத்தன் காட்டுற அன்பு அப்பாவை இவ்வளவு சந்தோசப்படுத்துது. பெத்த பிள்ளை நாம அப்பாவை வீட்டை விட்டு இல்லத்துல சேர்த்து விட்டோம்னா எதுக்குங்க வாழறோம்னு தோணிச்சு. வாழ்க்கையில இனி ஒருமுறை கூட இப்படி கனவிலும் யோசிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் .
முதியோர் இல்லங்கள் கூடாதுன்னு நான் சொல்ல வரலேங்க....ஆனால்,முதியோர் இல்லாத இல்லங்கள் எல்லாம் நாளைக்கு முரட்டு இல்லங்களா ஆகி விடக் கூடாதுன்னுதான் சொல்ல வர்றேங்க..........

எழுதியவர் : க .கார்த்தீசன் (18-Dec-12, 9:14 pm)
சேர்த்தது : kartheesan
பார்வை : 284

மேலே