ரசவாதம்.
நீச உலோகமும் கனிமமும் கொண்டு
வீசும் ஒளியுடை பொன்னைச் செய்ய
நாச உலகிதில் பலரும் முயன்று
மோசம் போன கதைகளும் உண்டு.
பொன் என்ற தனி ஒரு பொருள்
சொன்ன மாத்திரம் செய்வது அரிது
சொர்ணம் என்று மனிதர் அதனை
சொல்வதில் இங்கு அர்த்தம் உள்ளது.
எடையில் தனித்து அதிக மிகுதியாய்
உடைந்தும் பகுதிகள் நெருக்கம் கொண்டதாய்
தடைக்கேற்ப வளைந்து மென்மை அடைந்து
அடைய அணுகிடும் துருவினை விலக்கும்
மதியின் வண்ணம் மேலோர் கீற்று
மஞ்சள் ஒளிரும் மேன்மை கொண்ட
தங்கம் என்பதை தரணியில் என்றும்
தங்கா மாந்தர் செய்திட இயலுமா?
அப்படி அதனைச் செய்து விட்டாலும்
தப்பாய் கந்தகம் வீரம் சேர்த்து
உப்பிடும் உப்பதன் இயல்பறியாமல்
தப்பினால் அது தங்கம் அல்லவே.
ஆணுயிர் பெண்ணுயிர் இரண்டுங் கலந்து
தான் உயிர்க்கும் பொன்னுயிர் ஒன்று
இதுவல்லவோ உண்மையில் இயற்கை
பொதுவாகப் படைத்திட்ட ரசவாதம்.