ஒரு திரு(மதி)நங்கையின் குமுறல்..!!!

ஆணாய் கொண்ட பிறவி,
பெண்ணாய் இங்கே மருவி,
மாற்றம் என்னுள் வந்ததே,
என் தோற்றம் அதைச் சொன்னதே..

ஆண்மை எந்தன் இயல்பு,
வளவி அணிய வற்புறுத்தும் எந்தன் உணர்வு..
நிமிர்ந்த நடை தளர்ந்து போக,
நெளிந்த நடை உலர்ந்து போனதே..

மேனி மாற்றம் கொண்ட காரணமென்னவோ,
வாழ்வு சீற்றம் கொள்ள காரணமதுவே..
ஏற்றமில்லை என்றபோதும்,
கெட்ட நாற்றம் போல என்னை ஒதுக்குவதேனோ..

என் செல்கள் செய்த கோளாறு,
அதன் செவிக்கு என் குமுறல் கேட்பதில்லை..
எறிந்த கற்கள் என் தேகம் கிழிக்க,
நெறிஞ்சி முற்கள் மீது நடந்து போகிறேன்..

பெண்ணைக் கண்டால் மதிப்புண்டு,
என்னைக் கண்டால் வெறுப்புண்டு..
நானும் பாதி பெண் தானே,
அரை வாணியான அரவாணி தானே..

பெற்றவன் பாசம் பிறக்கும் வரை,
பெற்றவள் பாசம், நான் வளரும் வரை,
உறவுகள் பாசமொரு கருப்புத் திரை,
யாரோ என் துணை..
என் உயிருள்ள வரை..!!!

எழுதியவர் : பிரதீப் (21-Dec-12, 7:26 pm)
பார்வை : 212

மேலே