அடையத் துடிக்கிறேன் ஆவியின் உருவில்.

கவிதைகள் பலவும் நான் எழுதி
கருப்பொருள் நீயெனச் சொல்லாமல்
உருப்படியான உண்மை நிகழ்வுகளை
கருப்பு மை கொண்டு எழுதி வந்தேன்.

எழுதி வந்தவை உருத் தெரியாததால்
அழுது அத்தாள்களை அப்புறப் படுத்த
நழுவிய கவிதைகள் நாலா புறமும்
விழுதுபோல் விரிந்து சிரித்தது என்ன

சிரித்தது ஏனென சிந்தித்துப் பார்க்க
விரித்து நிற்பவை விழுதுகள் அல்ல
அரித்து என் நெஞ்சை அன்றாடம்
கரித்த நினைவுகள், காதல் நினைவு.

காதல் நினைவில் கழன்ற மரையில்
வாதம் செய்துனை பார்த்திட நினைத்து
நாத வடிவிலே நல்லொரு பாடலை
நான் உனக்குப் படைத்தேன் இன்று.

படைத்ததை ஏற்கும் நிலையில் நீயில்லை
உடைத்து நம் காதலை ஒழித்து விட்டாயே
அடைத்திடும் நெஞ்சினை அணைத்துக் கொண்டு
அடையத் துடிக்கிறேன் ஆவியின் உருவில்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (24-Dec-12, 2:35 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 94

மேலே