மனிதனென நிரூபி !

வில் அம்புகள்
தோளேந்தி - முரசறிவித்து
பெண்டிர் பிணியோர்
மகவுகள் தவிர்த்து,
தகவுகள் இருப்பின்
போருக்கான தரவுகள்
தந்தபின் - வீரமும்
வீரமும் பேசித்திரியும்
போர்களங்களுக்கு
இலக்கணங்கள் உண்டு,
எமக்கு, தமிழராகிய நமக்கு !

கந்தகம் நிறைந்த
சாவுப்பை ஒன்றை,
இயந்திரப்பறவை
கழிந்த இடம் - கருகி
இருந்த பிஞ்சு உயிர்கள்
உருத்தெரியாமல் உருகி
சிதைப்பது வெறியா ?
சிதைவது வெற்றியா ??

நிறைமாத கர்ப்பிணிகளின்
கனவுகள் களைந்து,
கருக்கள் கலைத்து - பல
சந்ததிகளின்
சாந்தி கெடுத்து
சந்தியில் நிறுத்துவது
பேதமையா ?
பேடித்தன்மையா ??

உலகோர்
இரண்டாய் பிரிந்து
உயிரழிக்கும்
கொலைவிழாவிற்கு
உலகப்போர் - எனப்
பெயராம் - என்ன
பேர்தல் அன்றி
பெயர்ந்ததாம் ?

கண்டம் விற்று கண்டம்
தாக்கும் ஏவுகணை
எங்களிடமுண்டு - எங்கு
கிடைக்கும் மனிதாபிமானம் ?
அழிக்க வேண்டிய
எல்லாமுமுண்டு,
அழிய வேண்டிய
எல்லாமுமுண்டு,
எங்களுக்கு நாங்களே
சண்டையிட்டு - சாவக்
காத்திருக்கிறோம் !
காலனுக்கு ஓய்வுகொடுக்க !

பீரங்கியின்
பெருமை பேசுவோம்,
அணு குண்டுடன்
அன்பு பேசுவோம்
தோட்டாக்களுடன்
தோழமை கொள்வோம் !
தோழர்கள் கொல்வோம் !
எதற்காக என்று மட்டும்
கேட்காதீர்கள் - தேடி
முடியவில்லை - எங்கு
தேடியும் கிடைக்கவில்லை !

சூரியன்
தூக்கிபோட்ட
எச்சில் துண்டை,
துண்டு போடுகிறோம் !
நாடு பிடிக்கும்
போட்டிக்கு நடுவே
குண்டு போடுகிறோம் !
கொன்று போடுகிறோம் !

தினம் தினம்
பிணம் திங்கும்
திமிங்கிலமிது !
வெடிகுண்டுகள்
வெடிக்கும் நிமிடம்
வெடித்துச் சிதறும்
பலருக்குள் இருந்து சாகும்
கனவுகள் ஏராளம் !
இதன்வழி இப்படிப்போய்
எங்கு ஏறலாம் ?
நரகம் தவிர்த்து !

பள்ளிகள் மீதும்
மனைகள் மீதும் - மருத்துவ
மனைகள் மீதும்
வீசிய வெடியெல்லாம்
மனிதன் மனிதம்மேல்
வீசிய செருப்படி அல்லவா ?
கூரிய நெருப்படி அல்லவா ?

புறாக்கள் அறுத்து
புன்னகைகள் வேகவைத்து
பிணத்தோடு புணர்ந்து
ஊர்ந்து வரும் - துப்பாக்கி
துப்பிய வீரத்தில்
வீறுநடை போட்டு
வந்து நிற்பவன் வீரனா ?
மரணத்தின் வேடனா ??

மடிந்து மடித்தவர்ளுக்கு
மத்தியில் - முழு
நிர்வாணமாய்
ஓடிவந்த ஒரு சிறுமி
ஒரு போர் நிறுத்தினாள் !

இன்னும் எத்தனை பேர்
ஓட வேண்டும் - உங்கள்
இரத்த வெறி நிறுத்த ??

யுத்தம் நிறுத்து !
என்காது கிழிக்கும்
சத்தம் நிறுத்து !
ஊரெங்கிலும்
சாந்தம் நிறுவி - நாம்
மனிதனென நிரூபி !

எழுதியவர் : வினோதன் (25-Dec-12, 6:18 pm)
பார்வை : 364

மேலே