தாவணிகளுக்கு சமர்ப்பணம் !

அலறும் அலாரத்தின்
குரல்வலை அழுத்தி
கதறல் நிறுத்தி
கீழிமைக்கும் மேலிமைக்கும்
இடைப்பட்ட காதலை
தகர்த்து விழிக்கிறாள் !
உள்ளங்கைகளில்
முகம் பார்த்தபடி !
களைந்த ஆடைகள்
தத்தம் இடம்புகுந்து
சரியானபின் - சாவி
கொடுத்த பொம்மையாய்
வேலை செய்கிறாள் !
குளிர்ந்த நீரின்
குளுமையை - முகத்தால்
குடித்து - அழுக்குத்
துவைக்கிறாள் !
கண்கள் விரிக்கிறாள் !
முற்றத்தின் முகத்தின்
அதிகாலை தூக்கம்
துடைகிறாள் - தண்ணீர்
தெளித்து - பலதோஷம்
போக்க - சாணம் கலந்து !
சீமார் சரிசெய்து
சீராக கூட்டி
வட்டமாய் தெறித்து
ஓடும் - மண்துகள்
கண்டு ரசிக்கிறாள் !
கண்டு சிரிக்கிறாள் !
தெருமுகத்தின்
பல பொட்டுக்கள்
வெள்ளையில் !
ஆம், அவை அவளின்
ஒற்றை கை ஒத்திகை !
ஆட்காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும்
இடைப்பட்ட சந்துகளில்
வந்து விழுகிறது
வண்ண மாவு - வளைந்து !
முற்றம் - வண்ண
முகப்பூச்சு பூசி
நடுவில் - சாணத்தின் நடுவே
பூவொன்று பூக்க வைத்து,
கடைசியாய் ஒருமுறை
கண்வைத்து - போர்வை
புகுகிறாள், அவ்வழகி !
தெருக்களில்
இறங்கி நடந்து
மார்கழி மாத
கோலம் பார்க்க
வரும் ஞாயிறு - கோலத்தை
மட்டுமே பார்க்க
வருவதில்லை - கோலமிட்ட
கோபிகைகளையும்தான் !
கடவுள் - அதிகாலை
உலாவருவதன் - காரணம்
கண்டு கொண்டேன் !
அதிகாலை நடைபயிற்சி
அவசியமாமே ?
வாருங்கள் ஓடுவோம் -
கோலங்கள் கண்டபடி -
கோபிகைகள் கண்டுபிடி !
(மார்கழி மாதம் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, இந்த நவயுக நாட்களிலும் கோலமிட அதிகாலை துயிலெழும் தாவணிகளுக்கு சமர்ப்பணம் !)