என் குழந்தை ஊருக்கு சென்று திரும்பியிருக்கிறாள்....
குழந்தை முத்தமிட்டால்
அந்த இடத்தின் எச்சிலை
அனிச்சையாய் அழிப்பவரா நீங்கள்?
ஓங்கி கன்னத்தில் அறைகையில்
அந்த இடம் தடவி
குழந்தையை முறைப்பவரா நீங்கள்?
தலைவாரி பூச்சூட்டி பொட்டிட வருகையில்
ஆண் என்ற ஆணவத்தில்
மறுப்பவரா நீங்கள்?
யானை மேல அம்பாரத்துக்கு
முட்டி போட முடியாமல்
கர்வத்தில் நிற்பவரா நீங்கள்?
உங்களோடு எனெக்கென்ன பேச்சு?
ஊரிலிருந்து வந்திருக்கிறாள் குழந்தை
இந்நேரம் தேடியிருப்பாள்
விளையாடுவதற்கு...
உங்களுக்குத் தெரியுமா?
என்னைத் தவிர
வேறோர் பொம்மை பற்றி
கடவுளிடம் கூட
பெருமைப் பட்டதேயில்லை அவள்..!