தனியொரு மனிதன்

பேரும் புகழும் பெற்றிடவே
பொய்யிற் புரளும் உலகமிதில்
மேரு மலை போல் உயர்ந்திடவே
பெரிய மனிதர் போர்வையில்
சேரும் இடத்தில் சேர்ந்திடின்
செய்திடலாம் இங்கு சாதனை.

நேர் வழி மட்டும் தெரிந்ததால்
நெறிகளை நெஞ்சில் நிறைத்ததால்
பேர்வழி பைசா பெறாதவன் எனும்
பெரிய பெயரைப் பெற்றதால்
தேர் நிகர் வாகன வசதியில்லை
தேடி வந்திடக் கூட்டமில்லை.

மனிதருக்குள் நான் மாணிக்கம்
என்றால் என்னை மறந்திடலாம்
புனிதரும் போற்றும் மகாத்துமா
என்றால் என்னைச் சுட்டிடலாம்
தனியொரு மனிதன் இவனென்றே
இனியென்னை அழைத்தால் போதுமே.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (28-Dec-12, 4:29 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 116

மேலே