விசேஷம் உண்டா?
ரெங்கசாமிக்கு திருமணம் ஆகி பத்துமாதம் ஆயிட்டு.ஏன் பத்துமாதம் ஆயிட்டுன்னு குறிப்பிட்டு சொல்றேன்னா எல்லாரும் அவனைப் பார்க்கும் பொழுது கேட்கிற கேள்வி அப்படி?
அழகான மனைவி...பெயர் மீனாட்சி ..நல்ல குடும்பம்...ரெங்கசாமியும் இயல்பாகவே மிகவும் அமைதியானவன்.யார்கிட்டயும் வம்பு தும்புக்கு போக மாட்டான்...அதனால என்னவோ பலபேர் அவனை ஆண்மையில்லாதவனோ என்று தப்பான கண்ணோட்டத்துல பார்க்கிறது வழக்கமாயிட்டு...அருவாளையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு அநாவசியமா பேச தெரிந்தவன்தான் ஆம்பிளைன்னு நினைக்கிற புத்தி கெட்ட சமூகமாயிட்டே....!இதற்கு சொல்லி கொடுக்கவும் வேண்டுமா?
ரெங்கசாமியை பார்க்கறப்ப எல்லாம் ஒவோருத்தரும் அவன்கிட்ட "ஏப்பா வீட்ல ஏதும் விசேஷம் உண்டா?" என்று கேட்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல ரெங்கசாமி இந்த கேள்வியை பெரிசா எடுத்துக்கல..இல்லைன்னு சொல்லி சமாளிச்சான்.
வீட்டு வரண்டாவில் பெரியவர் ஒருத்தர் ரெங்கசாமி அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.அப்ப பார்த்து ரெங்கசாமி அந்த இடத்தில வந்தான்.ரெங்கசாமி அப்பா கூட ஒன்னும் கேட்கலை..பெரியவர் அவனைப் பார்த்து ,"ரெங்கசாமி ...உன் வீட்டுக்காரி எப்படியிருக்கா? ஏதேனும் விசேஷம் உண்டா? என்று வெளிப்படையாகவே கேட்டார்.
ரெங்கசாமி, "இதுவரை அப்படி ஒன்னும் இல்லை தாத்தா...கண்டிப்பா சீக்கிரமே நல்ல செய்தி சொல்றேன்"என்றான்.
பெரியவர் விடவில்லை.ரெங்கசாமி அப்பாவைப் பார்த்து உன் பையனையும் மருமகளையும் நல்ல டாக்டரா பார்த்து போய் பார்க்க சொல்..கல்யாணமாகி மாசக்கணக்கில் பொண்ணு சும்மா இருந்தா என்னனு பார்க்கணும் ...சும்மா விளையாட்டா இருந்திராதே என்று எச்சரித்தார்.
ரெங்கசாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.அன்று ராத்திரி மனைவியிடம் நடந்ததை சொன்னான்...
மீனாட்சி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது."ஏங்க...நான் போகும் இடமெல்லாம் இதே கேள்விதாங்க...எப்ப உன் வீட்டில் வளைகாப்புன்னு கேக்கிறாங்க"என்று விசும்பி விசும்பி அழுதாள்.அப்புறம் தன்னை ஒருவாறு தேற்றி கொண்டாள்.
ஏங்க...நமக்கு பிறகு கல்யானமாச்சுல்லா என் தோழி ப்ரியா..அவ குழந்தை உண்டாகியிருக்காங்க...அவளைப் பார்க்கலாமுன்னு வீட்டுக்குப் போனேங்க ...அவ மாமியாரோட முகமே சரியில்லைங்க...ஒருமாதிரி முகம் சுழிச்சுகிட்டு...ஏனோ தானோன்னு பேசினாங்க..அப்புறம் உடனே நான் கிளம்பிட்டேங்க
...ஏங்க..நமக்கு ஆண்டவன் இனி குழந்தை பாக்கியம் தரவே மாட்டானாங்க...மீனாட்சி ரெங்கசாமி தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள்....
ரெங்கசாமி மனைவியின் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினான்."கலங்காதே ..மீனா ...கல்யாணமாகி பத்து வருடம் கழித்து குழந்தை பெத்தவங்க இல்லையா...யாரோ சொன்னதையெல்லாம் மனசுல வச்சுக்காதே!"என்று ஆறுதல் சொன்னான்.
அது சரிங்க...நான் பொம்பள ..குழந்தை உண்டாகலன்னு சூசகமா கேட்கிறாங்க.நீங்க ஆம்பிளை...உங்ககிட்டயுமா? என்றாள் பரிதாபமாக மீனாட்சி.
பதிலா ஒன்றுமே சொல்லவில்லை ரெங்கசாமி. தலையாட்டிக் கொண்டே தூங்கி விட்டான்.
மறுநாள் காலை..ரெங்கசாமி இயல்பாக வேலைக்கு கிளம்பி போய்க் கொண்டிருந்தான்.போகும்போது நண்பர் குமாரையும் கூடவே கூட்டிக்கொண்டு போனான்.வழியில் ஒரு மருந்துக்கடை பக்கம் ரெண்டு பெரும் போனப்ப ரெண்டுபேருக்கும் பழக்கப்பட்ட சத்தியமூர்த்தி வந்தார்.
சத்தியமூர்த்தி பொண்ணுக்கு திருமணமாகி பதினோரு மாதங்களே ஆகியிருந்தது.அவரது மகள் பிரசவத்திற்கு தாய்வீடு வந்திருந்தாள்.இந்த விஷயம் ரெங்கசாமிக்கும் குமாருக்கும் ஏற்கனவே தெரியும்.
சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் ரெண்டு பேரும் வணக்கம் சொன்னார்கள்.குமார் சத்தியமூர்த்தியிடம்,"ஐயா என்ன இந்தப் பக்கம்?" என்றான்.உடனே ஏதோ சொல்ல வந்த சத்தியமூர்த்தி ரெங்கசாமியை பார்த்ததும் வார்த்தைகளை முழுங்கிக் கொண்டு,"குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சின்ன வேலை.அதான் வந்தேன்" என்றார்.
சத்தியமூர்த்தி மகளை பிரசவத்திற்காய் அந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் என்பதை குமார் புரிந்து கொண்டார்.ரெங்கசாமியும் சத்தியமூர்த்தியின் செயலை புரிந்து கொண்டான். ஆனால் எதுவும் தெரியாதது போல் மிகவும் இயல்பாக நடந்து போனான்..
பக்கத்துல ஒருவர் இன்னொருவரிடம்,"சார் வீட்ல விசேஷம் ஏதும் உண்டா? என்று கேட்டார் காதில் விழுந்த வேகத்தில் ரெங்கசாமி திரும்பி பார்த்தான்.
அவர் சொல்லும் பதிலை கேட்பதற்கு அவன் தயாராக இல்லை.சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.இந்த மாதிரி கேள்விகளை கேட்டு கேட்டு இந்த பத்து மாதத்திற்குள் ரெங்கசாமி மனம் நன்கு பழக்கப்பட்டிருந்தது.