தவம்
சிறுகதை தவம்
வே.ம.அருச்சுணன்
இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார்.
கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார்.
“ஏன்பா....அழகு....இப்ப என்னப்பா மணி...?”
“வீட்டுக்கு வந்தா ஏம்மா உயிரை வாங்கிறீங்க ?”
“காலம் கெட்டுக் கிடக்குதப்பா! நேரத்துல வீட்டுக்கு வரக் கூடாதா? அம்மா தனியாத் தானே இருக்கேன்...?”
“என்னைப் போன்ற இளம் பிள்ளைகள்.....சனிக்கிழமையிலே சந்தோசமா நண்பர்களோடு இருக்கிறதுலே என்னம்மா தப்பு.....? ஏம்மா என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க....!” அழகன் கோபப்படுகிறான்.
“உன் நண்பர்களோடப் போக வேண்டாம்னு அம்மா சொல்லல....பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிட்டா....நிம்மதியாப் படுப்பேன்ல....!”
“உங்க....நிம்மதியப் பற்றித்தான் பேசுறீங்க....என்னைப் பற்றி கொஞ்சமாவது நீங்க சிந்தித்துப் பேசியிருக்கிறீங்களா.....?”
“அழகு...நீ என்னோடப் பிள்ளை. உன்னோட சுக துக்கங்கள்ல எனக்கும் பங்கு இருக்குப்பா...!”
“ஆறு நாள் கம்பனியிலே கடுமையான வேலை....! ஓய்வு நாள்ல நண்பர்களோடு பேசினா மனம் ஆறுதல் படும். அதற்குத்தான் நண்பர்களோடு வெளியே போகிறேன்.”
“சரி...சரி....ஏதும் சாப்பிட்டியாப்பா...?”
“ம்....வெளியிலே நண்பர்களோடுச் சாப்பிட்டேன் ! ”
“தண்ணீர் ஏதும் கலக்கட்டுமா.....?”
“அதல்லாம் ஒன்றும் வேணாம்……… நீங்க போய்த் தூங்குங்க....!”
அழகன் தன் படுக்கை அறைக்குச் செல்கிறான்.
காமாட்சியின் அறையிலுள்ள சுவர்க்கடிகாரம் அதிகாலை மணி மூன்றைக் காட்டிக் கொண்டிருந்தது. மனதில் சோர்வும் தூக்கக் கலக்கமும் அவரை தள்ளாடியபடி நடக்கச் செய்கிறது. ஐம்பது வயது நிரம்பியக் காமாட்சியிடம் வயதுக்கு மீறிய முதுமை குடி கொண்டிருந்தது.
பத்தாண்டுகளுக்கு முன்பு கணவர் புற்றுநோயினால் காலமான பின்பு,தம் ஒரே பிள்ளை அழகனை வளர்க்கும் பொறுப்புக்குள்ளானார். கணவர் இறக்கும் போது,மகன்அழகனுக்குப் பதினைந்து வயது. இடைநிலைப்பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்தான்.
அப்பாவிடம் அடங்கி வளர்ந்தவன்,தாயிடம் கொஞ்சமும் பயமின்றி இருந்தான். வயது ஏற ஏற அவனிடன் அம்மா மீது இருந்த பயபக்தி துளியும் இல்லாமல் போய்விடுகிறது. அழகன் படிப்பில் ஒன்றும் சிறந்து விளங்க வில்லை என்றாலும் எஸ்.பி.எம் தேர்வில் சுமார் தேர்ச்சியைத்தான் பெற்றிருந்தான். இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா கல்விக்குப் பிறகு தனியார் நிறுவனமொன்றில் வேலையில் சேர்ந்து விடுகிறான். கைநிறையச் சம்பாதிக்கிறான். ஆனால், அம்மாவிடம் ஒரு காசும் கொடுக்கமாட்டான்!
அவன் தன் நண்பர்களுக்குப் பணத்தைத் தண்ணீராய்ச் செலவு செய்கிறான். புகைத்தல்,மது அருந்துதல் மட்டுமே தாயாருக்கு அவனைப் பற்றி அறிந்த கூடியத் தகவல். மற்றபடி அவனிடம் பிற இரகசிய நடவடிக்கைகளும் இருந்ததை அவர் அறியாமல் இருந்தார். தாயாரிடம் அவன் எந்த இரகசியத்தையும் கூறமாட்டான். அவரிடம் பேசுவதுக்கூட மிகவும் குறைந்திருந்தது.அவனுக்கு நண்பர்கள்தான் பெரிது. தாயாரிடம் பேசுவதையை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை!
“அழகு....காலா காலத்துல ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்து..”
“கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு வீடே கதியா......அடிமையா இருக்கனுமா..?
“கல்யாணம்னா...உனக்கு அடிமையா வாழ்றதுதான் தெரியுதா...?”
‘பின்ன....இப்ப எஞ்சோய்ப் பண்ற மாதிரி கல்யாணத்துக்குப் பின் வாழ முடியுமா? ,கல்யாணத்தப் பண்ணிக்கிட்டா....வாழ்க்கையே ஒரு பெண்ணுக்குப் பதில் சொல்லியே மடியனுமா...?”
“நான் எப்பப்பா....ஒரு பேரப்பிள்ளையைக் கொஞ்சப்போறேன்.....?”
“நீங்கப்.......பேரப் பிள்ளையைக் கொஞ்சறதுக்கு நான் பலிக்கடாவாகனுமா?”
“நான்...சொன்னா நீ கேட்கமாட்டே அழகு! வயசு இருபத்தைந்து ஆயிடுச்சு இப்பவே கல்யாணத்த முடிச்சாதானே....வயசானக் காலத்தில உனக்கு உதவியா பிள்ளைங்க இருப்பாங்க.....?”
“அம்மா...உங்க காலத்துல சின்ன வயசுலேயே கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு....வீட்டோட அடங்கிப் போனது. என்னால அது முடியாதும்மா. முப்பது வயது ஆயிட்ட என் கூட்டாளிங்கள்கூட இன்னும் கல்யாணத்தப் பண்ணிக் குடும்பஸ்தராக ஆகிடல....அவர்களைப் போல நானும் இன்னும் பத்து வருசத்துக்கு எஞ்சோய்ப் பண்ணப்போறேன்...!.”
“நான் சொன்னத...நீ எப்ப கேட்டிருக்க......! .ம்….சரி உன் இஷ்டம் போல நடந்துக்க.....!”
“அம்மா.....! உங்களுக்கு வயசாயிடுச்சு…..! .கல்யாணம் என் சொந்தப் பிரச்னை அது எப்ப....எப்படி பண்ணனும்னு எனக்கு நல்லவே தெரியும்! போயி...... உங்க வேலையப் பாருங்க.....!” கடுப்புடன் பேசுகிறான்.
“அவனது அடாவடித்தனமானப் பேச்சுக்குப் பிறகு அவனிடம் அவனது கல்யாணப் பேச்சைக் காமாட்சி எடுப்பதில்லை. இனி அது அவன் பாடு.....நமக்கு ஏன் இந்த வாய்வான வேலை......?”
இப்போதெல்லாம், காமாட்சி தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிவனே என்று இருக்கிறார்.
திருமணம் ஆன முதல் கணவர் அவரை வேலைக்கு அனுப்பதில்லை. மகா இராணி போல வீட்டில் வைத்துக் காமாட்சியை அழகுப் பார்க்கிறார். அவர் இருக்கும் வரையில் காமாட்சி யாதொரு கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
கணவர் இறந்த பின்னர்தான், தான் கற்ற எஸ்.பி.எம் கல்வியைக் கொண்டு ஒரு நிறுவனத்தில், சாதாரண வேலையில் சேர்ந்து மகனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.
கணவவரின்,சேமிப்பும், காப்புறுதிப் பணமும் கணிசமாக இருந்தன.எனினும் மகனை எப்படியும் ஒரு மருத்துவராக ஆக்கிய விட வேண்டும் என்று எண்ணினார். ஆனால்,மகனின் நடவடிக்கையால் அவரது எண்ணத்தில் ‘மண்’ விழுந்துவிட்டது!
அழகனிடம் நல்ல திறன் இருந்தது. ஆனால், அவன் தன் ஆற்றல் மூலம் கல்வியில் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணத்தை அவன் கடுகளவும் கொண்டிருக்கவில்லை! கூடா நட்பு அவனது வாழ்வைத் தடம் பிரளச்செய்தது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நண்பர்களோடுக் கூத்தும் கும்மாளமும்தான். அவனைக் கண்டிக்க அப்பா இல்லாமல் போனது அவனுக்குச் சாதகமாகிப்போகிறது.
ஒரு நாள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய காமாட்சி, உடல் அசதியாக இருக்கிறது என்று இருக்கையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தின் மயங்கி தரையில் சாய்கிறார்.
நல்ல வேளை,வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தவன் தாயாரை விரைந்து மருந்துவ மனைக்குக் கொண்டு செல்கிறான்.
இரத்த அழுத்தமும், இனிப்பு நீரும் உயர்ந்த நிலையில் இருந்ததால் ஒரு வாரம் மருத்துவமனையில் அவர் தங்கிச் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.
மருத்துவரின்,ஆலோசனைப்படி அளவானச் சாப்பாடும் மருந்தும் அவர் உடலை இளைக்கச் செய்தது! உள்ளச் சோர்வும் உடல் தளர்வும் அவரின் நடமாட்டத்தைப் பெருமளவில் குறைத்திருக்கிறது. சிகிட்சைக்குப் பின்,அழகன் இரண்டொரு நாட்கள் நண்பர்களோடு வெளியே செல்லாமல் அம்மாவைக் கவனித்துக்கொள்கிறான்.
“அழகு....அம்மா இப்போதெல்லம் முன்பு போல தெம்பா இல்ல....! உடல் பலவீனமாக இருக்கு. வேலைக்குக் கூடப் போக முடியுமான்னு சந்தேகமா இருக்கு.....!”
“ஏன் நீங்க வேலைக்குப் போகனும் வீட்டிலத் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்க.....!”
அன்றோடு, அவர் வேலைக்குப் செல்வதை நிறுத்திக் கொள்கிறார்.எனினும் வீட்டில் தனியாக இருப்பது காமாட்சிக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்துகிறது. வேலையில் இருந்தாலாவது,நாளு பேருடன் பேசி மகிழ்ந்திருக்கலாம்.இப்போது மகன் வீடு திரும்பும் வரையில் வீட்டில் ஒன்றையில் இருப்பது மனப் பயத்தைக் கொடுக்கிறது. தவித்த வாய்க்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கொண்டு வந்து கொடுக்க ஆளில்லையே என்றும் வருந்துகிறார்.
தனிமை அவரை வாட்டும் போதெல்லாம் கணவனின் திருவுருப் படத்தின் முன் நின்று கண்ணீர் விடுவார். அது அவருக்குச் சற்று ஆறதலைக் கொடுக்கும்.
பல வேளைகளில் வெளியூருக்கு நண்பர்களுடன் திருமண விருந்து,சுற்றுலா என்று காமாட்சியைத் தனிமையில் விட்டு விட்டுப் பல நாட்கள் வெளியில் அழகன் தங்கிவிடும் போதெல்லாம்,காமாட்சிக்கு மிகவும் பயமாகவும்,கவலையாகவும் இருக்கும்.ஆண்டவனை வேண்டிக்கொண்டு,உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மகனின்அன்புக்காக ஏங்குவார்.
வெளியூரில் அழகன் இருக்கும்போதுகூட அம்மா தனிமையில் இருப்பார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பான்.கைபேசியில் கூட அழைத்து நலம் விசாரிக்கமாட்டான். மகன் குரலைக் கேட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டதே என்ற கவலையில் இவரே கைபேசியில் அழைத்தாலும் அழகன் சரியாகப் பதில் சொல்ல மாட்டான். வேண்டா வெறுப்பாகப் பேசுவான்.
பல நாட்களுக்குப் பிறகு அவன் வீடு திரும்பி வந்த பிறகும் கூட அம்மாவின் நலனைக் கேட்பதில் அதிக அக்கறைக் கொண்டவனாகவோ,அம்மாவின் அன்புக்காக ஏங்கி தவிப்பவனாகவோ காட்டிக் கொள்ள மாட்டான்.வீட்டிலிருக்கும் அம்மா என்பவர் ஏதோ ஒரு ஜடப்பொருள் இருப்பது போலவே நடந்து கொள்வான். அம்மா என்ற ஓர் உயர்ந்த ஆத்மா,தன்னுடன் இருப்பதை அறவே மறந்தவன் போலக் காட்டிக்கொள்வான்.
“யாப்பா...அழகு அம்மாவை இப்படித் தனிமையில் விட்டுட்டுப் போரியே....அம்மாவுக்கு ஏதும் ஆயிடுமேனு கவலை உனக்கு இல்லையாப்பா....?”
“விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். அப்படி எதுவும் நடந்தா நான் என்னம்மா செய்ய முடியும்.....?”அலட்சியம் அவனது பதிலில் தொக்கி நிற்கும்.
“அழகு....உங்கப்பா இறந்த பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பாட்டு உன்னை வளர்த்திருப்பேன்.வேலைக்குப் போன நேரம் தவிர்த்து ஒரு கணம் கூட உன்னை விட்டுப் பிரியாம... உன் கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டேனே! இந்தத் தள்ளாத வயதிலே,நோயால்வாடும் இந்த நேரத்தில் கூட,அம்மாவைத் தன்னந்தனியாக விட்டுப்போறியே...அம்மா மேல உனக்கு இரக்கமே இல்லையா....?”
“ பெற்றதற்காக... என்னை நீங்க காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை...”
“சரி அழகு....நீ குழந்தையாக இருந்த போது அம்மா உன்னைக் கவனிச்சிக்கிட்டேன்,இப்ப அம்மா.....வயசாகி அதிலும் நோயாளியா நலிந்துப் போயிருக்கிற இந்த நேரத்திலே பெற்ற பிள்ளை...நீ, அம்மாவைக் கவனிக்கிறது உன்னோட கடமைதானே....அழகு....?”
“அம்மா.........! நீங்க நல்லாதானே இருக்கீங்க...உங்களுக்கு என்ன ஆயிடுச்சு இப்ப...?ஏன் தேவை இல்லாம எதை எதையோ பேசிப் பிரச்னையை உண்டுப் பண்றீங்கே....?” சொற்கள் நெருப்புத் துண்டுகளாகத் தெரிக்கின்றன.....!”
அன்று மாலை நண்பர்களுடன் விருந்து நிகழ்வுக்குப் போகிறான் அழகன். நண்பனின் பிறந்த தின விருந்து பெரிய ரெஸ்டாரண்டில் நடைபெறுகிறது.அந்த விருந்தில் மதுபானம் முக்கிய இடம் பெறுகிறது.
விருந்து நிகழ்வு முடிந்து விடியற்காலை மூன்று மணியளவில் வீடு திருப்பிக் கொண்டுயிருந்த அழகனின் கார் திடீரெனச் சாலையை விட்டு அருகிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் பலமுறைத் தலைக் கீழாகப் பிரண்டுவிடுகிறது!
மது போதை மட்டுமல்லாமல் தூக்கம் அழகன் தன்னை மறந்த சில வினாடிகளில் கார் அவனது கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகிறது.
நண்பனின் கைப்பேசி அலறுகிறது. காமாட்சி அழைப்பை எடுக்கும் போது காலை ஆறுமணியாகி இருந்தது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அழகன் தலையில் பலத்தக் கட்டுகளுடன் சுயநினைவின்றி இருந்தான். இருபத்து நான்கு மணி நேரம் மருத்துவர்கள் அவனது உயிருக்குக் கெடு கொடுத்திருந்தனர்!
“அழகு என்னப்பா ஆச்சு...?”
“அம்மா...என்னை மன்னிச்சிடுங்கம்மா....! உங்கப் பேச்சைக் கேட்காம போனதற்கு ஆண்டவன் எனக்கு நல்ல தண்டனையைக் கொடுத்துட்டாரு....!”
இடுப்புக்குக் கீழே செயலிழந்து போன அழகன்,அம்மாவின் வயிற்றில் மீண்டும் பிறக்கிறான்.
முற்றும்