போதையில் ............(சிறுகதை)
''அம்மா பசிக்குது .....''
ஐந்து வயது பிள்ளை பசி பொறுக்க முடியாமல் கதறிக் கொண்டு இருந்தது.
அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.அந்தப் பிஞ்சுக்கோ பசியைப்
பொறுக்க முடியவில்லை.தாயின் சட்டையை இழுத்து இழுத்து கத்திக்
கொண்டிருந்தாள் பூஜா.
''அடியேய்....கொஞ்சம் இரடி...அப்பா அரிசி கொண்டு வரட்டும்...''
கொஞ்சம் கோபத்தோடும்,எரிச்சலோடும் பிள்ளையை கடித்துக் கொண்டாள்
ஜானகி.
''அடுப்பில் உலையை வை,நான் எப்பிடியாவது அரிசி வாங்கிட்டு
வந்திடுறன் ''என்று சொல்லிவிட்டு போன மாணிக்கத்தை இன்னும்
காணவில்லை.வாசல் படியிலேயே இருந்து கணவன் வரவை எதிர்பார்த்துக்
காத்திருந்தால் ஜானகி.
இரண்டு நாளாக யார் வயலிலும் வேலைக்கு ஆள் எடுக்கவில்லை
என்பதால் மாணிக்கத்தின் கைகளில் காசு இல்லை.தினம் தினம்
உழைத்தால்தான் அன்றைக்கு உணவு என்கின்ற நிலையில் இரண்டு
நாள் வேலை இல்லை என்றால் எப்படிச் சாப்பிடுவது.யாரிடமாவது
கடன் வாங்கி அரிசி வாங்கி வருகிறேன் என்று போனவனைத்தான் இன்னும்
காணவில்லை.
ஆனால்.......
மாணிக்கத்திற்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை.தெரிந்தவர்களிடம்
எல்லாம் கேட்டும் பார்த்தான்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம்
சொல்லி விரட்டித்தான் விட்டார்கள்.சோர்ந்து போய் விட்டான் மாணிக்கம்.
நடக்கக்கூட தெம்பில்லை.அத்தனை சோர்வு அவன் உடலிலும் மனதிலும்.
வீதியோரமாகவே நடந்து வந்துகொண்டிருந்தான்.
**********
''என்ன ஐயா .......இண்டைக்கும் குடிச்சிப் போட்டுத்தான் வந்தனீங்களே.....
எத்தின நாள்தான் உங்களுக்கு சொல்லுறது.குடுச்சுப் போட்டு
வேலைக்கு வரவேண்டாம் எண்டு...இனி வேலைய விட்டுத்தான்
நிக்கப்போறியள்.....''
சுதாகர் கோபத்தில் சீறினான்.அரிசி ஆலை நிறுவனமொன்றில்
பணிபுரிபவன் சுதாகர்.அவன் உள்ளூர் கடைகளுக்கு அரிசி விநியோகம்
செய்யும் பொறுப்பில் இருப்பவன்.அவனுடைய லொறி சாரதிதான்
துரை ஐயா.வயது ஐம்பதிற்கு மேல் இருக்கும்.எப்போதும் கொஞ்சம்
குடித்துவிட்டுத்தான் வேலைக்கு வருவார்.என்னதான் குடித்தாலும்
வாகனம் ஒழுங்காகத்தான் ஓட்டுவார்.அந்தளவுக்கு அனுபவம் நிறைந்தவர்.
ஆனால்.......
இன்றைக்கு என்னமோ கொஞ்சம் அதிகமாய்த்தான் குடித்திருப்பார்
போலத் தோன்றியது.நிற்பதற்கே கொஞ்சம் தள்ளாடினார்.
என்னதான் இருந்தாலும் துரை ஐயாவைத் தவிர வேறு சாரதிகளை
வைத்துக் கொள்ள மாட்டான் சுதாகர்.திட்டினாலும் அவர்தான்
அவனுக்கு சாரதி.
''சரி சரி லொறிய எடுங்கோ......வெளிக்கிடுவோம்....''
துரை ஐயா கொஞ்சம் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டே
லொறியில் ஏறினார்.சுதாகரும்தான்.
*********
''அம்மா பசிக்குது.....அம்மா பசிக்குது.......''என்று அழுது அழுதே
தூங்கிவிட்டாள் பூஜா.கண்ணீர் அவள் கன்னத்தில் காய்ந்து கிடந்தது.
ஜானகி வாசலிலேயே இருந்து நிலையில் தன் தலையை சாய்த்தபடி
மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்தபடியே யோசனையில்
திளைத்திருந்தாள்.
மாணிக்கத்தின் நிலையை சொல்லவே வேண்டாம்.வீட்டிற்கு செல்லவும்
மனம் விடவில்லை.உலை வைத்து விட்டு ஜானகி காத்திருப்பாள்.
சரி தாங்கள்தான் பெரியவர்கள் பசியைப் பொறுத்துக் கொள்வோம்,
அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன செய்யும்.என்ன செய்வது ,யாரிடம் போவது
என்று தெரியாமலேயே கால்போன போக்கில் போய்க்கொண்டிருந்தான்.
''ஐயா இண்டைக்கு ஓட்டம் பிழையாத்தான் கிடக்குது.பார்த்துப்
போங்கையா....''
துரை ஐயாவுக்கு போதை அதிகமானதால் எங்கு போகின்றோம்
என்று தெரியாமல் சென்றுகொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட துரை ஐயாவின் நிலைமையும் மாணிக்கத்தின் நிலையும்
ஒன்றுதான்.துரை ஐயாவுக்கு போதை மயக்கம்,மாணிக்கத்திற்கு பசி
மயக்கம்.
மாணிக்கம் நடந்து கொண்டேயிருந்தேன்.எங்கு போகின்றோம் என்கின்ற
தெளிவில்லை.நிதானமற்ற நடை.அப்படியே பாலத்திற்கு வந்துவிட்டான்.
பாலத்தால் நடந்து வந்துகொண்டிருந்தவன் தனக்கு எதிரில் வரும்
வாகனங்களையோ அல்லது பக்கத்தில் வரும் வாகனங்களையோ பற்றி
கவனமில்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
துரை ஐயாவும் கூடத்தான்........
அதே பாலத்தில் நிதானமற்று லொறியை ஓடிக்கொண்டு வந்தவன் நேரே
சென்று மாணிக்கத்தை அடித்த அடியில் மாணிக்கம் அப்படியே பாலத்திற்கு
மேலாய் சென்று ஆற்றில் விழுந்தான்.
பசி மயக்கத்தில் நடந்தவன் ஒரேயடியாய் மயங்கினான்.
ஜானகி வாசலில் மாணிக்கத்தை எதிர்பார்த்தபடியே இருந்தாள்.
பூஜா உறங்கிக் கொண்டிருந்தாள்.
அடுப்பிலே உலை கொதித்துக்கொண்டிருந்தது.