ஐ லவ் யூ...!

" ஐ லவ் யூ டா............ஐ லவ் யூ சோ மச் டா.........; உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்குது '

சொல்லி விட்டு அவள் சென்று சில மணித்துளிகளே ஆகின்றன. ஜிவ்வென்று எனைச் சுற்றி அடித்த காற்றின் குளுமை கூடிப் போனது. மேகங்கள் எல்லாம் அங்கும் இங்கும் அவசரமாய் அலைந்து எனக்கான ஒரு மழையைப் பெய்து விடவா என்று சில சில கருமையான மேகங்களின் மூலம் கண்ணசைத்து கேட்டது. கண்கள் சொருக நா வரள ஜெயித்து விட்ட என் காதலை ஜெயித்தது என்று எப்படி சொல்வது அது நிகழ்ந்து விட்டது என்றுதான் சொல்வேன்....

என் உலகத்திற்கு யாரோ வர்ணங்கள் பூசியிருக்க வேண்டும் அத்தனை கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள். என் தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களில் ஒன்று கூட இந்த பூமிக்கு சொந்தமானது அல்ல என்று நான் சொல்லும் போதே என்னை நகைப்போடு நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? ஆமாம் நம்ப மாட்டீர்கள் உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் வர்ணக்கூட்டின் ஏழு நிறங்கள் மட்டுமே! ஏழைத் தாண்டின வர்ணம் இல்லை என்பவர்கள் எல்லாம் ஏழைகள்தான்...!!!

என் வீட்டைச் சுற்றிலும் பறக்கும் பட்டாம் பூச்சிகள் எல்லாம் என்னிடம் ஏதேதோ பேசுகின்றன...மெல்ல காதோரம் வந்து அவளுக்காக நான் வடிக்கவேண்டிய கவிதைகளுக்கு வார்த்தைகளை தெளித்து விட்டுச் செல்கின்றன.

உடம்பினுள் ஏறிப் பரவிய உஷ்ணம் புத்திக்குள் புகுந்து பிரபஞ்ச சுழற்சியின் மூலத்தின் வேர்கள் செல்களாய் பரவியிருக்கும் பகுதிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு எல்லாம் உஷ்ணமூட்டி இதோ..இதோ விடிந்து விட்டது உமது பொழுது ஜனித்து விட்டது உமக்கான வேளை என்று தட்டியெழுப்பி உடலின் அதி நுட்ப ஹார்மோன்களை எல்லாம் அதீத கதியில் உஷார் படுத்த எனக்குள் ஒரு யுத்தத்திற்கு தயாராகும் படை வீரர்களுக்கு சமமாய் எல்லா செயல்களும் நிகழ அவள் உச்சரித்து சென்ற வார்த்தைகள் இன்னும் காதுகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அவளை பார்த்து இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிப் போன பொழுதிலும் அவளின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு முதல் நொடியிலிருந்து கடந்து கொண்டிருக்கும் இந்த நொடி வரை ஒரே அலை நீளத்தில்தானிருக்கிறது. அவளை அவ்வளவு அழகென்று யாரும் சொல்ல மாட்டார்களெனினும் அவளின் உதடுகள் பேசா மொழிகளை கண்கள் பார்வை வீச்சுக்களாய் என்னை தாக்கி கலவரப்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நானோ கற்பனைகளில் வாழும் கலா ரசிகன்; அவளோ எதார்த்த பூமி என்னும் ஏகாதிபத்தியத்தின் பட்டத்து அரசி. அவளின் திருப்தியின் தூரங்கள் நீங்களும் நானும் கணிப்புகளுக்குள் கொண்டு வரமுடியாதது. தாஜ்மகாலை ஷாஜகான் காதலின் சின்னமாக கட்டினான் என்று சொன்னால், அவள் இறந்த பின்பு கட்டி என்ன பிரயோஜனம்....? அதனால் மும்தாஜ் என்ன நிறைவை எய்தி விடுவாள்? என்பாள்.

கவிதைகளின் அர்த்தங்களை விட அதன் ஆழங்களை நேசிக்கிறேன் என்பாள். என்னிடம் உனது தேவை காதலல்ல காமம் என்பாள். உலகத்தோர் அனைவரும் காமம் கொள்ளவே காதல் கொள்கிறார்கள் என்பாள் புன்முறுவலோடு...

காமத்தை சமைக்க பிரபஞ்சம் வைத்த மிகப்பெரிய மார்க்கெட்டிங் காதல் என்பது என்பாள்.....! தனித்த காதல் எங்கே இருக்கிறது காட்டு என்று என்னிடம் கேள்விகளில் கேலி செய்வாள்....! ஆணும் பெண்ணுமென்று நிறைந்திருக்கும் இப்புவியின் மூலமே காமம் இந்த பிரபஞ்சத்தின் பல்கிக் பெருகும் வேகமே அதைச் சொல்லவில்லையா? என்பாள்.....

நான் விளக்கங்கள் என்னும் விளக்குகளால் வெளிச்சமாயிருக்கிறேன் என்று நினைத்த போது எல்லாம் அவள் கேள்வி என்னும் காற்றால் என் வெளிச்சத்தை பல முறை அணைத்திருக்கிறாள். மரணத்திற்கு அழும் மனிதர்களின் சுய நல உலகில் நீயும் ஒருவன் என்று ஒரு முறை என்னிடம் கூறியதின் ஆழத்தை யோசித்து பார்க்கையில் பளீரென்று உண்மை விளங்கியது. இல்லாமல் கொள்ளாமல் உருவான பிண்டம் என்பது பேருண்மையின் ஏதோ ஒரு செயல் வடிவ உந்து சக்திதானே....?

பிண்டங்களுக்குள் உயிர் ஊற்றியது யாரென்ற கேள்வியை விதைத்து விதைத்து பதிலை அறுவடை செய்யாமல் வெறுமனே தம்மை புரட்சியாளரென்றும், புதுமைப் புலிகள் என்றும் அறிவில் சிறந்த விற்பன்னர் என்றும் கருதி இறுமாந்திருப்பதின் பின் புலத்தில் அறியாமைதானே மிகுந்திருக்கிறது?

இல்லாத இடத்திலிருந்து வந்த இடைக்கால சதியே.. நீ மீண்டும் இல்லாத இடத்திற்கு நகர்வதற்கு ஏன் அழ வேண்டும்? இப்படி கேள்விகளால் என்னைத் துளைத்தவள் தான் சற்று முன் என்னை நேசிக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாள்.

அவள் வலுவானவள், ஆனால் காதல் என்பதற்கு காமமே முதற் பொருள் என்று சொன்னதில் ஓரளவிற்கு உண்மை கூட இருக்கலாம். காமம் ஆதார ஸ்ருதியாய் இருக்கலாம் காமத்தின் பொருட்டு பிரபஞ்சம் இயங்கலாம்..ஆனால் பிரபஞ்சத்தின் மொத்த ஓட்டம் செல்வது காமத்தை அடைய அல்ல..அது காமத்தை கைக் கொண்டு இயங்கி, இயங்கி பல்கிப் பெருகி மீண்டும் செல்வது தன்னின் மூல நிலை நோக்கித்தானே? இங்கே அழிய வேண்டியே தோன்ற வேண்டியிருக்கிறது....! அறுக்க வேண்டியே பெற வேண்டியதாயிருக்கிறது. கிடைப்பது என்பது எல்லாம் கிடைப்பதா? நிஜத்தில்..அல்லவே அது பின்னாளில் யாருக்கேனும் கொடுப்பது.....

பதின்மத்தில் கிளர்வு கொள்ளும் மனம் உடலின் வலிவுகளுக்குள் புகுந்து கொண்டு தனது சீற்றத்தினை தேடி அலையும் பருவத்தில் சொல்லப்படும் ஒரு பதத்தின் பெயர் காதலென்றால் அதன் பின்னணியில் காமத்தின் ஆளுமைதான் மிகை. இந்த காமம் எப்படி அழியும்? என்பது உமது கேள்வியாயின் காமம் கொள் என்பதே பதில். காமம் அழிக்க, உடலின் ஹார்மோன்களின் உற்பத்தி குறைய அவற்றை உபயோகம் கொள்ளல் வேண்டும். மறுத்து நின்றால் உள்ளது அழியுமா? இல்லாதது தோன்றுமா?

காமம் அழிய திருமணம் என்ற நெறிமுறை கொணரப்பட்டது. கொணர்ந்தவர் எல்லாம் பிரபஞ்ச மூலமறிந்தோரெனக் கொள்க. திருமண பந்தத்தில் நின்று விளங்கி காமத்தை காமத்தால் அழித்து இன்னும் என்ன மிச்சம் என்று உடல் தளர்வுற்று நாற்பதுகளைத் தாண்டும் நல்ல மனிதர்கள் காமத்தை மரணிக்கச் செய்து விட்டு மிச்சமாய் இருக்கும் சொச்சத்தோடு தன் துணையை நோக்குமிடத்தில் பிரமாண்ட ராஜ்யம் செய்கிறது காதல்.

காதல் பிரபஞ்சத்தின் ஆதி உண்மை. அசைவில்லா பேரிறை. காமமென்பது சலனமுற்ற சூன்யம். அசைந்து ஆடிய மூலம்.....இந்த மூலத்தை விட்டு நகர்தல் என்பதும் பொய்.... காதலென்ற ஒன்று இல்லை என்பதும் பொய்.

தில்லையில் ஆடும் கூத்தனின் ஆட்டத்தை ஒத்து ஆடி ஆடி...பாதங்கள் சுழல உடலின் அதிர்வுகள் ஒழிய களைத்து சளைத்து ஆடத் திரணியற்று சடலமாய் கீழே விழும் தருணம் எங்கணம் பரிபூரண திருப்தி நம்மை ஆட்கொள்கிறதோ......அங்கணமே இல்வாழ்க்கையில் ஆடிக் களித்து புளியங்காயாய் ஒன்றி இருந்த காமகாதல் வாழ்க்கையில் அது பழுத்தவுடன் ஓடுகள் நீங்கி புளியின் பழம் மட்டும் தனிப்பது போல காமம் கழன்று கொள்ள அப்போது அதி மதுரமான காதல் மிளிர்கிறது......

என்று அவளிடம் நான் பேசி முடித்திருந்தேன்....!

நான் காதல் செய்கிறேன் என்பது காமம் கொள்ள அல்ல ஆனால் காமம் கடக்க......!!! எச்சத்தில் மிகுந்திருக்கப்போவது இந்தப் பிரபஞ்சம் முழுதும் காதல் மட்டுமேதானேயன்றி வேறொன்றும் இல்லை என்று கூறி முடிக்கையில் அவளின் மனம் சிறிது சலனப்பட்டு அசைந்து உண்மைக்கு அருகே வந்ததை உணர முடிந்தது.

இவ்வளவும் நான் பேசிய பின்பும் அவள் தீர்மானித்திருப்பாள் என்னை காதலிக்கலாம் என்று....,அதன் தொடர்ச்சியாக அவள் பகின்ற வார்த்தைகள்தான் மேலே நான் சொன்னதும் அதன் தொடர்ச்சியாக என்னுள் எழுந்த இரசாயன மாற்றங்களும். ஒரு பெண் நம்மிடம் காதலைச் சொல்லும் போது அதுவும் நாம் ஒரளவிற்கு மனதினுள் ஆசைகள் வைத்திருந்த பெண் சொல்லும் போது மனக்கிலேசங்கள் வருவது இயல்பு.

ஆனால்......இயல்பாய்த்தான் அவள் காதலை சொன்னாளா? இல்லையே...பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பூப்பது எப்படி காதலாகும்? ஒரு பூ தானே பூக்கவேண்டுமேயன்றி அதை நாம் பூக்க வைக்க முயன்றால் அங்கே இயற்கையின் முரண் சமைந்து விடுகிறது. இவள் அறிவானவளாயிருக்கலாம், கொஞ்சம் அழகானவளாய் கூட இருக்கலாம்...

கேள்விகள் கேட்டா மழை பெய்கிறது? அது நிகழ்கிறது அவ்வளவே....! புத்தி என்பது அவ்வப்போது நாம் வாழ்வியலில் உடலாய் வாழும் போது உபயோகம் கொள்வது ஆனால் முழுக்க முழுக்க புத்தியை மட்டும் கொண்டு வாழுதல் ஒரு இயந்திரத்தனமான நிகழ்வாய் போய்விடும். மனிதரென்றால் பயந்து, வெட்கப்பட்டு, பொய் சொல்லி, சிறு சிறு தவறுகள் செய்து, அடித்து, வாங்கி, ஓடி , இளைத்து என்று எல்லாமுமாய் வாழ வேண்டும். அறிவுகளை வைத்துக் கொன்டு நான் எப்படி ஒரு மழையில் நனைய? ஒரு இசையில் மயங்க...ஒரு கவிதையின் பொய்யில் தொலைய....

ஆமாம் என்னால் அவளைக் காதலிக்க முடியாது. அவளின் அறிவு என்னைக் கொன்றே விடும்....! அவளின் தற்சார்பு நிலை எனது ஏகாந்த நிலைக்கு முரணாணது....!!!!

கை பேசியில் அவளின் இலக்கங்களை அனிச்சையாய் எனது விரல் தடவிய சற்றைக்கெல்லாம் தொடர்பில் வந்தவளிடம் சொன்னேன்....

' சாரி ஷோபனா............ஐ காண்ட் லவ் யூ..........!!!!! டெஃபினட்லி...ஐ காண்ட் லவ் யூ.....ஐயம் வெரி சாரி......யூ வில் ஃபைன்ட் அ பெட்டெர் பேர் ஃபார் யூ ஃபார் சுர்......'

மறுமொழிக்கு காத்திராமல் என் கைபேசியை சுவிட்ஸ் ஆஃப் செய்தேன்....! ஆழமாய் சுவாசித்தேன்....!!! இதோ எனக்கான மழை வந்தே விட்டது.......தீர தீர நனையப் போகிறேன்............வாங்க பாஸ் நீங்களும்......சேர்ந்தே நனைவோம்...!

" திக்கற்ற வெளிகளில்...
எங்கெங்கோ பறக்கிறேன்...
ஏதேதோ நிகழ்கிறது... "

எழுதியவர் : Dheva.S (3-Jan-13, 1:27 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 574

மேலே