முன் ஜென்மத் தேடல் நீ....!
அதுதான் அவளை கடைசியாக நான் பார்த்தது. அதன் பின் நான் அவளை விட்டு பிரிந்து விட்டேன். அவளைப் பிரிந்த காலம் எனக்கு சரியாய் நினைவில் இல்லை. மங்கலான நிழற்படங்கள் போல காட்சிகள் புத்திக்குள் மெதுவாய் ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் எதையும் வலுக்கட்டாயமாக நினைக்கவில்லை. என்ன நிகழ்கிறதோ அதை நான் உணருகிறேன் அவ்வளவே.
ஒரு மாதிரியான சூது, வாதுகள் நிறைந்த மிகவும் கலவரமான காலமாய் அது இருக்கிறது. நான் ஒரு போர்வீரனாய் இருக்கிறேன். என்ன பதவியில் இருந்தேன் என்பது எல்லாம் எனக்கு சரியாய் நினைவில் இல்லை. நிறைய குடிப்பவனாக நான் இருக்கிறேன். அப்படி குடிப்பவனாக இருப்பதாலேயே அதிகமாய் மாமிசம் உண்பவனாயும், அந்த மாமிசமும், மதுவும் என் இரத்த ஓட்டத்தை வேகமாக்க புத்தி எப்போதும் வேகமாய் சிந்திக்கவும், மூர்க்கமாய் கோபம் கொள்ளவும், அதிகமாய் கர்வம் கொள்ளவும், எப்போதும் காமத்தைப் பற்றியே சிந்திக்கவும் பழகிக் கொண்டு விட்டது.
போர்க்களத்தில் நான் ஒரு போதும் என் உயிர் பற்றி கவலைப்பட்டது கிடையாது. வலிகளை வலிக்க, வலிக்க அனுபவித்து இருக்கிறேன். எதிராளியின் உயிரை எப்படி எடுப்பது என்பது மட்டுமே எனக்கான கவலை. நான் புரவியில் ஏறி அதன் அடி வயிற்றை உதைத்து கடிவாளத்தைச் சொடுக்கி காற்றில் கேசம் பறக்க புழுதி பறக்கும் போர்க்களத்தில் அங்கும் இங்கும் இரத்த வாடைக்குள் உலாவி இருக்கிறேன். என் உடைவாள் இரத்தம் தோய்ந்து ஈரமாய் சொத சொதவென்று என் கையில் இருக்கையில் பெரும் கனைப்போடு பாய்ந்து, பாய்ந்து வேட்டையாடி இருக்கிறேன். தர்மம் எது, தவறு எது என்றெல்லாம் கணக்குப் போட எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. என் தேசத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான பற்று கொண்டவனாயும் அதன் தலைமைக்கு விசுவாசமானவனாயும் நான் இருந்திருக்கிறேன்.
போரிடுதலை எப்படி மூர்க்கமாய் நான் செய்திருக்கிறேனோ அதே போலக் காமத்தில் திளைக்கையிலும் அதே மூர்க்கத்துடன் ஈடுபட்டிருக்கிறேன். பரத்தையர்கள் தொடர்புகள் அதிகம் கொண்ட ஒருவன் என்று என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். கடுமையான போராட்டதிற்குப் பிறகு உடலும் மனமும் களைப்பாற ஒரே வழி காமம்தான் என்று எனக்குள் ஏனோ எப்போதும் தோன்றும். காதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் இருந்த போதுதான்...
அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது....விழிகள் வெறுமனே பார்க்கத்தான் என்று நினைத்திருந்த எனக்கு அன்றுதான் விழிகளால் விழிகளை விழுங்க முடியும் என்று உணர முடிந்தது. அவளின் முகம் மட்டுமே என் நினைவுக்குள் தற்போது எட்டிப் பார்க்கிறது. பெண் என்றாலே மோகம், பெண் என்றாலே காமம்.....என்று இங்கும் அங்கும் பெண்களைக் கவர்வதும் பின் கூடுவதும்.... என்று புத்தி எப்போதும் குறு குறுப்பாகவே இருந்திருக்கிறது.
போர்க்களத்தில் வாளெடுத்து வீசி வீசி, உயிர்களைக் கொன்று, கொன்று ஒரு மாதிரி நிலையாமை என்னுள் குடிகொண்டிருந்தது. பலரின் மரணத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். பலருக்கு மரணத்தை நானும் கொடுத்திருக்கிறேன். குரல்வளையில் வாள் வீச குரல்வளை நரம்புகளும் சல்லி எலும்புகளும் நொறுங்க தொண்டை அறுபட்டு தலை தனியே கழன்று விழ பீறிட்டு அடிக்கும் இரத்தம் என் முகத்தில் பல முறை பளீச் சென்று பட்டிருக்கிறது. உடல் கடந்து தனியே துடிக்க, தலை தனியே கழன்று கிடக்க, செத்துப் போனவனின் ஆசை என்னவாயிருந்திருக்கும், அவன் கனவுகள் என்னவாயிருந்திருக்கும் என்றெல்லாம் கண நேரம் யோசிக்கையிலேயே உள்ளிருக்கும் ஒரு மிருகவெறி இறந்து இடக்கும் உடலை எட்டி உதைந்தபடி மறுபடி தொடை தட்டி களத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும்...
மரணம் கடைசி முடிச்சு அல்ல..மரணத்தின் அடுத்த முடிச்சு காமத்தில் அவிழ்க்கப் படுகிறது. மரணத்தை நேசிப்பவர்கள் எல்லாம் நிலையாமையை உணர்ந்தவர்கள். நிலையாமையை உணர்கையில் பரிபூரணத்தின் நிசப்ததின் மீது ஆசை கொண்டவர்களாகிறார்கள். நிசப்ததின் மீது ஆசை கொண்டவன் தீராக் காமம் கொள்கிறான். முட்டி மோதிக் காமத்தில் திளைக்கையில் அங்கே அவன் கண் முன் ஒரு போர்க்களம் தெரிகிறது. காமத்தை மனதில் தேக்கிக் கொண்டவனுக்கு சண்டையிடும் எதிராளி யாரென்ற கவலை எல்லாம் கிடையவே கிடையாது. போர்க்களமும் போருமே ஒரு போராளிக்கு முக்கியம்....என்னைப் போலவே....
குடம், குடமாய் மது குடித்து விட்டு, நாக்கிற்கு வக்கணையாய் மாமிசத்தைப் புசித்து விட்டு உன்மத்தம் தலைக்கேற ஏதேனும் ஒரு பெண்ணிடம் சல்லாபிக்கும் நிமிடம் கிட்டத்தட்ட ஒரு போரினை ஒத்தது. தாவிப் பிடித்து, உடை கிழித்து அவிழ்த்து, திமிரும் அழகினை அடக்கி, இடுப்பு வளைத்து மூர்க்கமாய் முன்னேறி காது மடல் கடித்து, முதுகெலும்பு நொறுங்கக் கட்டிப்பிடித்து உதடுகளில் உயிர் உறிஞ்சி, கழுத்தில் முகம் புதைத்து, மெல்ல கீழிறங்கி ஒரு குழந்தையாய் முட்டி மோதி ஜீவனைக் கரைத்து, வளைந்து செல்லும் இடுப்பினை கர்ண கொடூரமாய் வலிக்க, வலிக்க கடித்து, நகர்ந்து நகர்ந்து வாழ்க்கை சூட்சுமத்தின் பெரு வெளிக்குள் பிடறி சிலிர்த்த ஒரு சிம்மமாய் உட்சென்று, இதோ இதோ...இவன் தான் என் எதிரி....அதோ அதோ அவன் தான் என் எதிரி, என்று அடித்து துவம்சம் செய்து முன்னேறி, முன்னேறி.....
' மூர்க்கமான அணைத்தல்கள்
வெறித்தனமான முத்தங்கள்
என்று...
உச்சம் தொட்டு விடாமல்
கவனமாய் நகர்ந்து நகர்ந்து
பின் மெல்ல மெல்ல முன்னேறி
இலக்கில்லா இயக்கத்தில்
ஒரு அடங்கா குதிரையாய்
மூர்க்கம் கொள்கிறேன் நான்.....'
இரக்கமில்லாத என் அரக்க நகர்வுகளின் உச்சத்தில் நான் வெடித்து சிதறும் நிமிடத்தில் எங்கோ நான் விழுந்து கிடக்க கழுத்தறுப்பட்டு துடித்து விழுகின்றன ஓராயிரம் உடல்கள். மரணத்தின் சாயலை காமத்தின் உச்சத்தில் கண்ட பொழுதில் என் போர்களுக்கும் இந்த காமத்திற்குமிருந்த மெல்லிய தொடர்பு எனக்குப் புலப்பட்டுப் போனது. மெல்லிய உணர்வாய் இவை எல்லாம் என்னுள் ஸ்பூரிக்க....
அவளின் முகம் மீண்டும் என்னுள் மங்கலாய்த் தோன்ற....காமத்தையும், மரணத்தையும் ஆளுமை செய்யும் ஒரு மென் உணர்வு என்னுள் மெதுவாய் எட்டிபார்த்து உடலின் இச்சையை மறந்து விட்டு உள்ளத்துக்குள் ஒரு இச்சையைப் பரப்பிப்போட...நான் பார்த்த அவளை உடனே மஞ்சனையில் தள்ளி சுகிக்க விரும்பால், அவள் விழிகளுக்குள் விழுந்து நீந்தத் தொடங்கி இருந்தேன். காதல் என்ற உணர்வினை நான் இதுவரையில் மதித்து நடந்தது கிடையாது. பிண்டங்களின் உரசலில் ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் ஜனித்தலுக்கான திருவிளையாட்டில் காதலெதற்கு .....? என்று நான் காதல் என்ற வார்த்தையை கால்களால் எட்டி உதைத்து எள்ளி நகையாடி இருக்கிறேன்...
காமத்திற்காக கட்டிப் புரளும் பெண்களிடம் காதல் வந்ததில்லை. அப்படி காதல் இல்லாமல் உடல்கள் மோதிக்கொள்ளுமிடத்தில் மென்மையான உணர்வுகள் என்று எனக்கு எதுவும் தோன்றியதில்லை. அது பெரும் பள்ளத்தாக்கின் உச்சி நுனிலிருந்து குதிக்கும் கிளர்ச்சியை ஒத்தது...ஆனால்..அவளைக் கண்டவுடன் காதல் அதிகமாகி அந்த காதலைக் கடந்து செல்லக் காமத்தின் துணை நாடி... பெரும் பள்ளத்தாக்கின் சரிவுகளில் மெல்ல மெல்ல இறங்கி அதன் பேரழகை ரசித்துச் செல்லும் ஒரு ஆவல் எனக்குள் தோன்றியது...
அவளைத் திருமணம் செய்தேன்.... இரவும் பகலும் அவளோடு கூடிக் கூடி பெரும் பள்ளத்தாக்கில் சுகமான பயணத்தினை நான் காற்றிலேறி தொடர்ந்திருக்கிறேன்......காமத்தில் திளைத்துக் கிடந்த எனக்குள் காதல் ஏதோ ஒரு பாடம் சொல்ல கிறங்கிக் கிடந்திருக்கிறேன்....! என்னை உயிராய் நேசிக்கும் அவளின் காதலை எல்லாம் அத்தான்..என்று அவள் என்னை அழைக்கும் வார்த்தைகளுக்குள் அடைத்து என்னை திக்குமுக்காடச் செய்வாள்.
அவளுக்கு கவிதை எழுதத் தெரியும் என்று சொன்ன பொழுதில் நான் எங்கே எழுது என்று சொல்லி எனக்குப் பரிச்சையமில்லாத விசயத்தைக் காணும் ஆவலுடன் ஒரு குழந்தையாய் காத்திருந்தேன்...
தூரிகையின் மை தொட்டு.....
' உன்னைத் தொட்ட நினைவுகளில்
பித்துப் பிடித்துப் போயிருக்கும்
என் விரல்களும்,
உன் உடல் ஸ்பரிசித்த என் உடலும்
நித்தம் வடிக்கும் கண்ணீரில்
ஒளிந்திருக்கும் உன் மீதான காதல்
ஒவ்வொரு இரவிலும் நினைவுகளால்
என்னைத் தூக்கிலிட்டுக் கேட்கிறது....
உன் பந்தத்தின் மூலம் எது...?
உன் ஞாபகங்களை ஆள்வது யார்?
உன் சுவாசத்தில் நிறைந்தவன் யார்...?
துளைத்தெடுக்கும் கேள்விகளால்...
கனமாய்த்தான் நகர்கிறது...
ஒவ்வொரு நரக இரவும்.....! '
என் மார்பினில் எழுதி முடித்தவளின் கண்ணீரில் மெல்ல மெல்லக் கரைய ஆரம்பத்திருந்த அவளின் கவிதையில்,என் மீதான காதலும், போர் வந்தால் மீண்டும் நான் சென்று விடுவேன் என்ற பயமும் கலந்திருந்ததை உணர முடிந்தது. அவள் காதலையும் பாசத்தையும் என் மீது வரைமுறையற்றுக் கொண்டிருந்ததில் நான் கலைந்து போயிருக்கையில்....
திடீரென்று ஒரு நாள் என் தேசத்துக்கு வந்த பெரும் போரில் ஈடுபட நான் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் குதிரையேறி ஒரு நடு நிசியில் போர்க்களம் வந்து விட்டேன். கடைசியாய் அவளறியாமல் அவளுக்குக் கொடுத்த அழுத்தமான முத்தத்தின் சுவடுகள் இன்னனும் அதிர்வுகளாய் என்னுள் துடித்துக் கொண்டிருக்க, அடி மனதில் அவள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்க.....பிளிறும் யானைகளுக்கும், கனைக்கும் குதிரைகளுக்கும் பறக்கும் புழுதி மண்ணுக்கும்....தப்புச் சத்ததிற்கும் கொம்பு ஊதும் சத்ததிற்கும் நடுவே......வெறியேறிப்போன புத்தியோடு..இதோ களம் புகுகிறேன் நான்...
அதிகாலை நேரத்தில் போர் உக்கிரமாக....வேல் கம்புகளையும், வீச்சருவாட்களையும், அம்புகளையும் கடந்து எதிரிகளின் தலை கொய்து ஆக்ரோசமாய் நான் முன்னேற.....உச்சிப் பொழுதிற்குள் போர் முடிந்து விடுமென்று எண்ணுமளவிற்கு எதிரிகளின் படைகளை துவம்சம் செய்கிறது எங்கள் படை.....
வெற்றிக் களிப்பில் நான் இடமாய் நகர்ந்து எதிரி ஒருவனின் நெஞ்சில் வாள் பாய்ச்சி இரத்தம் சொட்டச் சொட்ட, வலமாய் திரும்ப......என் கழுத்தில் வந்து பாய்கிறது எதிரி ஒருவனின் வாள்...என் கழுத்து அறுபட....விழிகள் நிலை குத்திப் போக....எனக்குள் மூர்க்கமான காமம் புத்திக்குள் எட்டிப்பார்க்க நிர்வாணமாய் எத்தனையோ பெண்கள் வந்து போக.....காதலாய் என் அவள் உறங்கிக் கொண்டிருக்க... எனக்குள் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்க....
உன்னை விட்டு விட்டு செல்கிறேன்......அம்மு..........என்ற எண்ணம் என்னை அழுத்த ஒரு பெரும் வலியோடு செத்துப் போனேன்...!
அவளை விட்டு, விட்டு வந்த வலி.......எனக்குள் இன்னமும்....இரணமாய் வலிக்க.....படுக்கையிலிருந்து புரண்டு படுக்கிறேன் நான்...!
என்ன இது...இப்படி....? ராத்திரி முச்சூடும் குடிச்ச ஒல்ட் மாங்க் பண்ற வேலையா?
வாட்ச் எடுத்து மணி பார்த்தேன்... அதிகாலை 4க்கு....இன்னமும் கால் மணி நேரம் இருக்கிறது என்று சொல்ல..... ப்ரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்து முழு வயிறு நிறைய.....குடித்தேன்...
என் அவளின் முகம், அவளை விட்டு வந்த நினைவு இன்னமும் புத்திக்குள் வலியாய் படுத்திருக்க...இவற்றை எல்லாம் எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்ற யோசனையோடு மீண்டும் படுக்கையில் விழுந்தேன்....
எனக்குள் அவள் வலியாய் சிரித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அப்படி ஒருத்தியைப் பார்ப்பேனா.... என்று புத்தி யோசிக்க ....இதை எழுத வேண்டும் என்ற நினைப்போடு எழுந்து பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதத் தொடங்கி இருந்தேன்....
"அதுதான் அவளைக் கடைசியாக நான் பார்த்தது. அதன் பின் நான் அவளை விட்டு பிரிந்து விட்டேன். அவளைப் பிரிந்த காலம் எனக்கு சரியாய் நினைவில் இல்லை. மங்கலான நிழற்படங்கள் போல காட்சிகள் புத்திக்குள் மெதுவாய் ஓடிக் கொண்டிருக்கின்றன........"