பிழைகள்

எழுதிடும் கருத்தை மாற்றிடும்
எழுத்தில் காணும் பிழைகள் !
உள்ளம் வருந்திடச் செய்திடும்
உடலில் ஏற்படும் பிழைகள் !
முகத்தை சுளிக்கச் செய்திடும்
பேசிடும் வார்த்தைப் பிழைகள் !
ஓவியத்தின் அழகு மங்கிடும்
தீட்டிடும் வண்ணத்தின் பிழைகள் !
கேட்டிடும் ஆர்வம் குறைந்திடும்
ஆற்றிடும் உரையின் பிழைகள் !
வாசிக்கும் வேகம் தளர்ந்திடும்
நேசிக்கும் நூலில் பிழைகள் !
மனிதனின் மனதை மாற்றிடும்
சொல்லிடும் கருத்துப் பிழைகள் !
ஆளுகின்ற அரசை மாற்றிடும்
ஆள்பவர் போக்கின் பிழைகள் !
சீர்மிகு சிறந்த அரசும் வீழ்ந்திடும்
சீரில்லா சிலர் செய்திடும் பிழைகள் !
சாதிமதம் வீதிகளில் மோதிடும்
தூண்டிடும் சதிகார பிழைகள் !
மொழிப்பற்று நாளும் தேய்ந்திடும்
வேற்றுமொழி மோகத்தின் பிழைகள் !
சமுதாய சந்தையை சீரழித்திடும்
சிந்தையில் விளையும் பிழைகள் !
அறியாமல் செய்திடும் தவறுகள்
அறிந்தவர் கண்டிடும் பிழைகள் !
பிழைகள் அற்ற அகிலம் அமைய
திருந்திடச் செய்வோம் !
திருத்திக் கொள்வோம் !
திறம்படச் செய்து முடிப்போம் !
பழனி குமார்