தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
மார்கழி புள்ளதாச்சி மகளையே பெற்றெடுக்க!
மாசமெல்லாம் வாசலிலே பூவைத்து
ஊரே ஒன்றுகூடி சீமந்தம் செய்யுறாங்க!
தையென்று அவளுக்கு
தரணியிலே பெயர்வைத்து
தாலாட்ட துடிக்குதுங்க!
அவள் பிறக்கும் நேரம் தொடங்கி...
வாழ்கையிலே நமக்கு நல்ல வழியென்று!
கழனியிலே உழைக்கும் கூட்டம்
காத்திருக்கு அவள் வருகைக்காக!
கதிரறுப்பு முடிஞ்சுருச்சு!
கையிருப்பு வந்தாச்சு!
பழைய கஞ்சி குடிக்கும் கூட்டம்
வயிறார அரிசிச்சோறு சாப்பிடனும்!
உழுது தந்த ஏர் முனையின்
உச்சி வருடி கும்பிடனும்!
இயற்கைக்கு நாம் பட்ட
கடன் கொஞ்சம் தீர்த்திடனும்!
கூடவே உழைத்த அந்த..
நான்கு கால் ஜீவனுக்கும்!
கும்பிட போட்டிடனும்
ஓடிவா தை மகளே!
தமிழ் உலகம் உன்னை
கூப்பிடுது கும்பிடத்தான்!!!