Arun Palaniyandi- கருத்துகள்

**********இப்படியும் ஒழிக்கலாம் வறுமையை**********

நிமிர்ந்தால் கூரை இடிக்கிறதா?
இடிக்கட்டும்.
குனிந்து நடந்து பழகிக்கொள்ளலாம்!

சாக்கடை தீவுகளை
தாண்டித்தான் வரவேண்டியிருக்கிறதா?
அதனால் என்ன‌
அதுதான் வந்தாயிற்றே!

குழந்தைக்கு விட்டு விட்டு ஜூரமா?
சுகாதாரம் கேள்விக்குறியாயிருக்கிற‌
அரசு மருத்துவமனைதான்
இருக்கவே இருக்கிறதே!

இன்றோ நாளையோ
சடங்காகும் சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணோ
சடலமாகும் சந்தர்ப்பத்தில் ஒரு கிழடோ
வீட்டில் இருக்கிறதா?
பஜன்லால் வட்டிக்கடை
பக்கத்தில் எங்கோ சொன்னார்களே!

புழுபூத்த ரேசன் அரிசியில்
கால் வயிறு நிறைகிறதா?
பிறகென்ன‌
கஞ்சித்தொட்டி அவலம்தான்
இல்லாமல் போயிற்றே?

கூவம் நற்றமும் கொசுக்கடியும்
தாள முடியவில்லையா?
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஆயிரம் கோடியில் கூவத்தைச்சுற்றி
பூங்கா அமைக்கப்போகிறார்களாம்!

புலம்பலை நிறுத்திவிட்டு
உண்மையைச் சொல்
ஒரு நாளைக்கு 23 ரூபாய்
சம்பாதிக்க முடிகிறதா?

வாழ்த்துக்கள் நண்பா!
வறுமைக்கோட்டை தாண்டிவிட்டாய்.

----------------------------- அருண் பழனியாண்டி ------------------


Arun Palaniyandi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே