எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேர்களை வணங்கும் விழுதுகள்... நேரில் காணும் தெய்வமாம் ஈன்றவளின்...

வேர்களை வணங்கும் விழுதுகள்...

நேரில் காணும் தெய்வமாம்
ஈன்றவளின்
தொப்புள்கொடி வேரினூடே
இரத்தம் உறிஞ்சிய
கருவித்துக்கள் நாம்....!!

நம் ஜனனத்தில்
தன் மரணம் கண்டு
மறு பிறப்பெடுத்தவளின்
ஆணிவேர் பிடிமாணங்களில்
இலைகளும் கனிகளுமாக
தழைத்தவர்கள் நாம்...!!

கல்வி தந்து
அறிவு தந்து நாம் உயர
அனைத்துமே தந்து... தந்து...
தேய்வுற்ற தந்தையின்
வியர்வைக் குருதியில்
ஓங்கி செழித்த ஆலமரம் நாம்...!!

வேர்களாய் தாங்கி நிற்கும்
ஈன்றோரை சான்றோரை
வேறாய் நினைத்து புறந்தள்ளாதே..
வேரகல தரை சாயும்
எம்மரமும் அறிவாயோ??

இலை பரப்பி... கிளை பரப்பி....
பசுமை என்றும் வாழ்வினில் பரப்பி
விண்முட்ட வளர்த்திட்ட
வலிதாங்கும் வேர்களையே
மனிதா
விழுதாய் இறங்கி வணங்கு...
நிதமும் விழுந்து தொழுதே வணங்கு...!!

நீ வேராகும் காலத்தில்
உன்னையும் ஓர் விழுது
வந்தேதான் வணங்கி தொழும்...

[குறிப்பு: சனவரி மாதம் நடைபெற்ற அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க 22ஆம் ஆண்டுவிழாவில்
வாசிக்கப் பெற்று இரண்டாம் பரிசினை வென்ற கவிதை. மேடையில் இந்த கவிதையை
வாசித்துவிட்டு திரும்புகையில் இந்த தலைப்பினில் மற்ற கவிஞர்களும் எழுதிய கவிதைகளை
புத்தகமாக தொகுத்து பரிசாக வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லைதான்]

---------------------------------------------------------------------
அன்னையர் தின வாழ்த்துக்களுடன்,
சொ.சாந்தி
----------------------------------------------------------------

பதிவு : C. SHANTHI
நாள் : 10-May-15, 10:59 am

மேலே