ஆணாதிக்கம்.... =============== தீண்டும் சின்ன ஒளி கூட இரவின்...
ஆணாதிக்கம்....
===============
தீண்டும்
சின்ன ஒளி கூட
இரவின் வதனவனப்பின்
கன்னங்களில்
ஓர் அழகிய ஓவியம்
தீட்டிக்கொள்கிறது..!
ஊடுருவும்
சிறு ஒலியைக் கூட
அதன் அசை, சீர், திசைவேகம்
எதுவும் சிதைவுறாமல்
பதிவாக்கிக் கொள்கிறது இரவு..!
ஒவ்வொரு நாளின்
வைகறைப் பொழுதுகளிலும்
இரவின் மடியிலிருந்து
பகல் நழுவிச் செல்லும்போதெல்லாம்
தான் கைவிடப்பட்டதாக
கவலை கொள்கிறது இரவு..!
சாமங்கள் தோறும்
சமிங்கைகள் எழுப்பி
பகலை எழுப்பிவிடும் ஆண்கோழிகளும்(சேவலும்)
ஆணாதிக்கத்தின் அடையாளங்களே..!!
இரவு காலங்களில்
பனிகளாக உறைந்து கிடக்கும்
பகலின் முத்தப் படிமங்களைக் கூட
பேரொளியின் வெப்ப வீச்சால்
போகிற போக்கில்
உடைத்தொழுக செய்கிறது பகல்..!
எந்த தடயமும் பகல் பதித்ததாக
பதிவுகள் இல்லாதபொழுது
வழக்கில்
எந்த தடயத்தை
எடுத்தாலும் இரவு..??
நித்தமும் நடக்கும்
பகலின் பகடைத்தனங்கள்
ஆறாத வலியை
ஆரம்பித்து வைக்கிறது இரவுக்கு..!
அதன் சமாதானங்கள்
ஒவ்வொன்றாக சரியத் தொடங்கி
நிலைகுலைந்து போனபொழுது
பகலின் தந்தை
பகலவனிடம் முறையிட்டது இரவு..!!
பகலவன் சொன்னான்...
தன்மீது ஆள்கொணர்வு மனு போட்டு
நிலவு தொடர்ந்த
நீண்ட நாள் வழக்கு
இன்னமும் நிலுவையில் இருக்கு..!!
கிடப்பில் போடப்பட்டிருக்கும் மனு
இனிவரும் கிரகண காலங்களில்
கேட்புக்கு வரும்பொழுது
தீர்வை செய்யும் தீர்ப்பு
இருவருக்கும் தீர்வுகள் தருமா?
"பார்ப்போம்" என்றான்
மேலாண்மை செய்யும்
ஆணாதிக்க சூரியன்...!
இயற்கையின் ச(வி)தியென்றும்
இயக்க விதியினின்று
விடுபட்டது போலவும்
ஒவ்வொரு நாளும்
தனித்த கோளமாய்
தத்தளிக்கிறது இரவு..!
ஏமாறும் இரவுகளைப் போலவே
ஏமாற்றும் வண்டுகள்
வரும்போதெல்லாம்
மலர்களும் மௌனமாகிவிடுகிறது..!
முன்னேற்றம்
கண்டுவிட்டதாகச் சொல்லும்
மேனாட்டு இரவுகள் கூட
மின்மினியின் வெளிச்சங்கள்
நாகரீக வெளிச்சத்தில் வீழ்த்தப்பட்ட
விட்டில் பூச்சிகள்
குறும் பகல்கள்
இளம் இரவுகளோடு
கூடிக்குலாவக் கொடுக்கும்
கொஞ்சகால சுதந்திரமே...!!
குறிப்பு: திறனாய்வு செய்யக் கூறி ஒரு பத்திரிக்கை எனக்களித்த "அலைகள்" என்கிற கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு கவிதை இது. நூலாசிரியர் சித்திரப்பாவை அவர்கள். படித்ததை பகிர்கிறேன்.