நட்பின் சாரல்கள் ! --------------------------- ஒவ்வோர் கனவையும் உன்னதம்...
நட்பின் சாரல்கள் !
---------------------------
ஒவ்வோர் கனவையும் உன்னதம் ஆக்கும்
உன்றன் நட்பின் உயிர்மை - விடியல்
அவ்வோர் நினைவையும் அகத்தில் நிறைக்கும்
அனிச்சம் பூவின் மகிமை !
பூவில் வரைந்த ஓவியம் போல்'எழில்
புன்னகை காட்டும் புருவம் - தமிழ்
பாவில் வடித்த பண்ணிசை போல்'எழில்
பண்பினை ஊட்டும் உருவம் !
வேதம் சொல்லும் விழிகள் இரண்டும்
வெட்சிப் பூக்களின் தாது - அழகுக்
காதில் ஜொலிக்கும் கம்மல்கள் இரண்டும்
கைக்கிளைக் கிள்ளையின் தூது !
படத்தில் காணும் பாவை இவளும்
பாடும் கம்பன் கவிதான் - மனத்
தடத்தில் நாணும் பூவை இவளும்
தங்கத் தருவின் கனிதான் !
நித்தம் ஓர்கவி நெஞ்சில் எழுதிடும்
நினைவுகள் தந்தவள் நீதான் - அதைச்
சத்தம் இன்றியே சரணப் பாடிடும்
சந்தக் குயிலும் நீதான் !
செவ்விதழ் சிந்திய செந்தேன் புன்னகை
செத்தும் மாறா ஓவியம் - உன்னைச்
செதுக்கும் விரல்கள் சிந்தும் வியர்வையால்
செழுங்கவி எழுதினால் காவியம் !
எத்தனை பிறவிகள் எடுத்தும் உயிரில்
இருந்திடும் உந்தன் அன்பு - உடல்
செத்தும் அழியா சுகந்தம் காக்கும்
சுடலையில் எந்தன் என்பு !
பாவலர் ,வீ. சீராளன்