தமிழ் ஒரு பூக்காடு பாவலர் கருமலைத்தமிழாழன் முத்தமிழே !...
தமிழ் ஒரு பூக்காடு பாவலர் கருமலைத்தமிழாழன்
முத்தமிழே ! ஞாலத்தில் முந்தி வந்தே
---மூவாமல் கன்னியென இலங்கு கின்றாய்
தித்திக்கும் அமுதமெனச் சுவையாய் நாவில்
---திகழ்கின்றாய் ! முச்சங்கப் புலவ ராலே
எத்திக்கும் புழ்மணக்கும் ஏற்றம் பெற்றாய் !
---எழுந்துவந்தே கடற்கோள்கள் அழித்த போதும்
வித்தாக முளைத்துநின்றாய் ! மூவேந் தர்தம்
---வளர்ப்பினிலே பூக்காடாய் செழித்து நின்றாய் !
எழுத்திற்கும் சொல்லிற்கும் நெறிவ குத்தே
---எழுதுகின்ற உலகத்து மொழிக ளுக்குள்
எழுத்திற்குள் அடங்காத உணர்வை; காதல்
---எழுப்புகின்ற மெய்ப்பாட்டை இல்ல றத்தை
தழுவுகின்ற கூடலினை ஊடல் தன்னை
---தாய்செவிலி பாங்கிபாங்கன் வாயில் கூற்றை
வழுவாத மறத்தைவாழ்வின் பொருளைக் கூறும்
---வண்தமிழோ இலக்கணத்துப் பூக்கா டென்பேன் !
நிலம்ஐந்தாய் பகுத்ததனைத் திணைக ளாக்கி
---நிகழ்கின்ற நிகழ்வுகளைத் துறைக ளாக்கிப்
புலப்பண்பைக் கருஉரியாய் அகத்தில் வைத்தும்
---புகழ்வீரம் புறமாக்கிப் பத்துப் பாட்டாய்
நிலவிடும்எட் டுத்தொகையாய் அறமு ரைக்கும்
---கீழ்க்கணக்காய்க் காப்பியமாய் தொன்னூற் றாறாய்ப்
பலப்பலவாய் வாழ்வியலை எதிரொ லிக்கும்
---பசுந்தமிழோ இலக்கியத்துப் பூக்கா டென்பேன் !
நங்கையிடம் தூதாக நடக்க வைத்து
---நரிதன்னைப் பரியாக்கி சாம்பல் தன்னை
மங்கையாக உயிர்ப்பித்து முதலை உண்ட
---மதலையினை உமிழவித்துப் பாய்சு ருட்டி
இங்குனக்கோ இடமின்றேல் எனக்கு மில்லை
---என்றாழ்வார் பின்செல்ல வைத்துப் பாட்டால்
எங்குமுள்ள இறைவனையே ஆட்டி வைத்த
---எழிற்றமிழோ பக்திமணப் பூக்கா டென்பேன் !
கீர்தனைகள் எனப்புரியா மொழியில் பாடக்
---கீழ்மேலாய்த் தலையாட்டும் மாடாய் ஆனோம்
சீர்த்தகுரல் கைக்கிளையும் துத்தம் தாரம்
---விளரியொடு உழைஇளியும் ஏழாய் நின்று
ஆர்த்தசுரம் பன்னிரண்டு பாலைக் குள்ளே
---அரும்பண்கள் நூறோடு மூன்றில் தேனைச்
சேர்த்தளிக்கும் துளைநரம்பு கருவி கொண்ட
---செந்தமிழோ இசைநிறைந்த பூக்கா டென்பேன் !
போர்க்களத்தில் அறம்பார்த்தும் விழுப்புண் மார்பைப்
---பொருதுபெறப் போட்டியிட்டும் பிறர்இல் நோக்கா
பேர்ஆண்மைக் காளையரைக் களவில் பார்த்தும்
---பெருங்காளை அடக்கிவரக் கற்பில் சேர்ந்தும்
பார்சுற்றிக் கடல்கடந்து பொருளை ஈட்டிப்
---பகிர்ந்தளித்தும் சாதியற்ற சமத்து வத்தில்
ஊர்இணைந்தும் வாழ்ந்திருந்த சங்க கால
---ஒண்தமிழோ வாழ்வியலின் பூக்கா டென்பேன் !
அன்றில்போல் அன்பிணைந்த காதற் பண்பை
---அழகான இல்லறத்தை மக்கட் பேற்றை
துன்பத்தை இன்முகமாய் ஏற்கும் நெஞ்சை
---துவளாமல் வினையாற்றும் பக்கு வத்தை
நன்மைதரும் மக்களாட்சி மாண்பை செங்கோல்
---நடத்துகின்ற அமைச்சர்தம் மதியைச் சொல்லும்
சின்னவடி முப்பாலால் செழித்தி ருக்கும்
---சீர்தமிழோ குறள்மணக்கும் பூக்கா டென்பேன் !
வானத்தில் ஊர்தியினைப் பறக்க விட்டு
---வளியடக்கிக் கடல்நீரில் கலத்தை விட்டு
ஞானத்தால் அணுப்பிளந்து பூமிக் கோளோ
---ஞாயிற்றைச் சுற்றுகின்ற செய்தி சொல்லி
வானளாவ நிற்கின்ற கோபு ரங்கள்
---வழியடைத்து நீர்தேக்கும் அணைகள் என்றே
நானிலமும் வியக்கின்ற அறிவைப் பெற்ற
--நற்றமிழோ அறிவியலின் பூக்கா டென்பேன் !
நெருப்பாக இருந்தவளோ நெருப்புக் குள்ளே
---நிதம்வெந்து மாயும்மன் றல்கை யூட்டை
ஒருகுலமாய் வாழ்ந்தவரைப் பகைமை யாக்கி
---ஒற்றுமையைச் சிதைத்திட்ட சாதிப் பேயை
உருக்குலைக்கும் மூடத்தை ஏற்றத் தாழ்வை
---உழல்கின்ற பெண்ணடிமை ஆண வத்தைக்
கருவறுக்கும் பாரதியார் பாவேந் தர்தம்
---கனல்தமிழோ புரட்சியூட்டும் பூக்கா டென்பேன் !
கொடிபடரத் தேரீந்தும் காட்டிற் குள்ளே
----கோலமயில் குளிர்போக்கப் போர்வை தந்தும்
துடித்திட்ட பறவைக்குச் சதைய ரிந்தும்
---துலக்கிட்டார் கருணையொன்றே துணையா மென்று
வடித்திட்ட யாதும்ஊர் கேளிர் என்னும்
---வகையான கருத்தாலே உலகைச் சேர்க்கும்
விடியலுக்கோ அன்பென்னும் விளக்கைக் காட்டும்
---வியன்தமிழோ மனிதநேயப் பூக்கா டென்பேன் !
முத்தமிழோ அறிவியலின் மொழியாய் ஓங்கி
---முன்னேறிக் கணிப்பொறியில் இடம்பி டித்தே
எத்திசையில் இருப்போரும் அறியும் வண்ணம்
---ஏற்றவகைக் குறியீட்டில் எழுத்த மைத்து
வித்தாக மென்பொருளும் சொல்தொ குப்பும்
---விசைப்பலகை எனப்பொதுவாய் ஆக்கி ஞாலம்
மொத்தமுமே ஒருநொடியில் படிக்க மாறு
---முகிழ்ந்ததமிழ் இணையத்துப் பூக்கா டென்பேன் !
ஆட்சிமொழி தமிழ்என்னும் பூவைச் சேர்த்தே
---அங்காடிப் பெயரெல்லாம் தமிழ்ப்பூ வாக்கி
மாட்சிதரும் மழலையர்தம் பள்ளி யெல்லாம்
---மணக்கின்ற தமிழ்ப்பூவை மலரச் செய்து
காட்சிதரும் பொறியியலை மருத்து வத்தைக்
---கவின்கொஞ்சும் தமிழ்ப்பூவின் தோட்ட மாக்கி
நாட்டிலெல்லா துறைகளிலும் பதியம் வைத்து
---நற்றமிழின் பூக்காட்டை வளர்போம் நன்றாய் !