எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூண்டுக்கிளி நிலைமையினாலே விலைமகள் ஆனேன். குடல்பசி தீர்க்க, நான்...


கூண்டுக்கிளி



நிலைமையினாலே

விலைமகள் ஆனேன்.

குடல்பசி தீர்க்க, நான்

உடல் பசி தீர்த்தேன்.



திசை பிசகியதாலே

சிதைந்ததென் தசை.

எள்ளும் உலகில் காலூன்ற

எத்தனித்தேன்.

உள்ளம் செத்த உடம்பை

ஊருக்களித்தேன்.



சூழ்நிலை, சதிவலை,

பிறந்து வந்திங்கே,

பிறழ்ந்து விட்டேன்.



கதவடைத்து புறந்தள்ளியதாலே,

கதவிலா வீட்டில் கடைவிரித்தேன்.

படுத்த படுக்கையான கணவன்.

பசியோடு நான் பெற்ற பிள்ளை.



துக்கம், தூக்கம், மறைத்து,

ஏக்கம், தாபம், புனைந்து,

விடியலின் முடிவு தெரியாது,

துடித்து நித்தம் துவள்கிறேன்.



முகத்தை அழகாக்கி,

அகத்தை அழுக்காக்கி,

சுகத்தை விருந்தாக்கி,

தேகத்தை வெறுப்பொடு விற்கின்றேன்.

தேய்கின்ற பிறையாய்
குறைகின்றேன்.



உணவில்லா உடலில் உணர்வுக்காய்
தடை போட்டேன்.

உயிர் உள்ள உடலில் உணவுக்காய்  
கடை போட்டேன்.



உயிரிலாப் பொருள் கடை உள்ளே.

உயிர்ப் பொருள் கடைத் தெருவிலே.

உடல(ழி)ளித்து வாழும் நிலையிலே.



எனக்கு மட்டும்

பகலில் சந்திரன்.

இரவில் சூரியன்.



செகத்தில் எனக்கு உணவில்லை.

செகத்தை அழிக்க எவருமில்லை.

கூண்டில் மாட்டிய பறவை நான்.

கூண்டைத் திறக்க பலருண்டு.

கூண்டைத் துறக்க வழியில்லை.



ச.தீபன்.

நங்கநல்லூர்.

94435 51706.

பதிவு : Deepan
நாள் : 6-Jul-20, 3:17 pm

மேலே