பசியை ஓரளவுக்கு அடக்க முடியும். மூச்சை கூட சில...
பசியை ஓரளவுக்கு அடக்க முடியும். மூச்சை கூட சில நொடிகள் அடக்க முடியும். ஆனால் கோபத்தை அடக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு நான் வேறு பலருடைய அனுபவங்களை சுட்டிக் காட்ட தேவையில்லை. சாட்சாத் நானே மிகவும் சிறந்த உதாரணம். அறுபது வருடங்களாக இவ்வுலகில் வாசம் புரிந்த பின்பும் , தியானம் , விழிப்புணர்வு இவை போன்ற அரிய பயிற்சிகள் செய்துவரினும், இன்றும் கூட, என் மீது கோபம் கொள்ளாமல் என்னை கட்டி அணைத்து என்னை வழி நடத்தி செல்கிறது, கோபம் என்கிற இந்த செல்லப் ( பொல்லாத) பிசாசு. உடல் உபாதைகள் காரணமா, உடல் அயர்ச்சி காரணமா, என்னை நானே முழுவதும் புரிந்து கொள்ளாத நிலை காரணமா, தெரியவில்லை. கோபத்தில் என் தொண்டை அதிகமாக சத்தம் இடும் நாதம் கேட்கையில், அந்த நேரத்தில் நான் மிகவும் இயற்கையான முறையில் தான் செயல்படுகிறேன் என்று என்னையே நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும், அந்த நிகழ்வுகளுக்கு பிறகு மனம் படும் வேதனை.. ஏராளம்...ஏராளம். இன்று காலை நான் 'இனி கோபத்தில் கூட ஒருவரைஇரைந்து பேசக்கூடாது "என்று உறுதி கொள்கிறேன். இந்த மாதிரி உறுதி மொழியை எவ்வளவு நாட்கள், வாரங்கள், வருடங்களாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்(கொண்றிருக்கிறேன்)..? இந்த ஒரு மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் நான் ஒவ்வொரு முறையும் வெட்கி தலை குனிகிறேன்.