என் தாத்தாவை பற்றி சொல்கிறேன்...!!!

தாத்தா உன்னை
நினைக்கும் போதெல்லாம்,
கையில் கைப்பிடியும்,
கயிறு கட்டிய கண்ணாடியும்,
ஒரு கட்டு வெற்றிலையும்,
முடிந்து வைத்த மூக்குபொடியும்,
தலப்பாகட்டு தலையும்,
நடனம் போட்ட பொடி நடையும்,
என் கண் முன்னே விரிந்து விடுகிறது..!!

உன் பெயர் நான் சுமந்தேன்
என்பதற்காக மட்டுமின்றி,
எத்தனை அளவில்லா அதிகாரமும்
நிகரில்லா பாசமும்,
என்மேலே நீ வைத்திருந்தாய்..!!

என்னை நடக்க வைக்க
நீ விழுந்தாய்,
என்னை கழுத்தில் சுமந்து
நீ மகிழ்ந்தாய்..!!
எங்கு சென்றாலும் என்னை
துணைக்கு கூட்டி சென்று
உன் நண்பன் ஆக்கிவிட்டாய்..!!

தடுக்கி விழுந்தால் தூக்கி விட்டு
தடவி கொடுப்பதும்,
பின்னே கோவத்துடன் ஏன் விழுந்தாய்
என அடிப்பதும்,
எப்படியெல்லாம் என்னை
ஆட்கொள்ள முடியுமென
நீ புரிந்திருந்தாய்..!!

உன் எச்சில் கையால் ஊட்டிவிட்ட
ஒவ்வொரு சோறும்,
ஒரு சுவையை கூட்டியது..!!
அம்மா அடிக்கும் போதெல்லாம்
என்னை அணைத்த உன் கைகள்
இன்றும் தழும்புகளாக என் முதுகில்..!!

நீ சொன்ன கதைகள் கேட்டு
நான் தூங்கியிருக்கிறேன்,
ஆனால் இன்னும் அந்த கதைகள்
தூங்காமல் முடிவில்லாமலே போய்விட்டன..!!

என்னை பிரிந்த நொடிகளில்
உன்னை நீ இழந்ததை
நான் நன்று அறிவேன்..!!
இப்போது உன்னை பிரிந்து
நான் தவிப்பதை உனக்கு
யார் சொல்வது தாத்தா...???

எழுதியவர் : மனோ ரெட் (4-Jun-13, 11:29 am)
பார்வை : 3058

மேலே