என் பெயர் சிவப்பு.....!!

ஏய் சிவப்பே உன்னுள் இருப்பது
ஒரு நிறமென்றாலும்,
சொல்லும் அர்த்தங்கள் ஓராயிரம்..!!
எத்தனை நிறங்கள் கண்ணில் தெரிந்தாலும்
சட்டென முதலில் ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் காதலும்,கோவமும்
ஒருசேர கலந்து தரும்
இச்சிவப்பின் பெயர் சிவப்பு நிறம்..!!
தலைவன் கண்கள் சிவக்க ரத்தம் சூடேறி
அனல் வார்த்தைகளை கக்கினால்
அமைதியென இருப்பவனுக்கும்
ரத்தம் கொதித்து உணர்ச்சி பிறக்கும்..!!
இச்சிவப்பின் பெயர் புரட்சி...!!
உயிரின் நாடித்துடிப்பை முடுக்கிவிட்டு
கால் முதல் தலை வரை
கிடுகிடுக்க செய்து
சாவு பயத்தை மூளைக்கு சொல்லும்
இச்சிவப்பின் பெயர் அபாயம்..!!
எலும்புகளின் நடுவே கொஞ்சம் சதை
கண்களில் தெரியும் கொலை பசி,
வறுமையில் ஓடாய் தேய்ந்து
வேலி ஓணானாய் விரட்டப்படும்
இச்சிவப்பின் பெயர் வறுமை..!!
உயிரை குடித்து உடலை தின்னும்
மனித பேய்களின் விலாசம்,
எவனின் இச்சைகளுக்கோ
இவளின் ரத்தம் ஊற்றி விளக்கை ஏற்றுவதால்
இச்சிவப்பின் பெயர் சிவப்பு விளக்கு..!!