யுகம் தாண்டும் சிறகுகள்- சிறகு 3 - ஜின்னா

பிம்பங்களற்ற தனிமையில் ...
===========================

மனதின் மௌனங்கள் சில நேர சலனத்தில் சங்கதிகளைத் தேடி சந்கீதமாகிக் கொண்டிருக்கலாம்
விழிகளின் வீணையில் வாசித்த சில நொடிப் பொழுது இதயத்தில் இசையாக நிரம்பிக் கொண்டிருக்கலாம்
அகல் விளக்குத் தீ ஆபத்தில்லை என்ற கணநேரம் ஆகாயத்தை சுடும் நிலைக்கு நெருங்கிக் கொண்டிருக்கலாம்
புரட்சிகளின் பூட்டுக்கு எழுத்து ஏகாதிபத்தியமே சாவியாகி திறந்துக் கொண்டிருக்கலாம்
சுதந்திரக் காற்றையும் சூடு குறையாத சுவாசக் காற்றாய் மாற்றிக் கொண்டிருக்கலாம்
வாழ்வியலின் வரவு செலவுகளை செவ்வாய் கிரகத்திற்கு சீர் கொடுத்து சிறப்பித்துக் கொண்டிருக்கலாம்
தொடு உணர்வுக்கும் தொடாத உணர்வுகளுக்கும் இடையில் ஏதோ ஒரு நிலையில் தொட்டுக் கொண்டிருக்கலாம்
சாபங்களும் வரங்களாக மாற்றும் சரித்திரம் சத்தமில்லாமல் நடந்துக் கொண்டிருக்கலாம்
காலத்தின் கணக்குகளை கடவுளின் நிழல் போல கவிதைக் கண்களால் சரி பார்த்துக் கொண்டிருக்கலாம்

இப்படித்தான் கவிதை என்பது என்ன மொழியாக இருப்பினும் இந்த நிலைகளில்தான் இருக்க கூடும்..

ஒரு கவிதை என்பது வெறும் வார்த்தைகளை மட்டும் வைத்து கட்டும் மணல் வீடு அல்ல
அது
வாழ்வியலையும் வைத்து கட்டப் படும் மாளிகை...

ஒரு கவிஞனின் பார்வை கடலின் அலையோடு நின்று விட கூடாது
அது
ஆழத்தில் அழுது கொண்டிருக்கும் ஒரு மீனை அடையாளம் கண்டு கொண்டதில் சென்று முடிய வேண்டும்...

எந்த கணத்தில் உங்களுக்கான கவிதையை நீங்கள் கண்டு பிடித்தீர்களோ அதுவே உங்களின் எதிர்கால எழுத்துலக கடிதத்திற்கு முகவரியாகி விடும்...

இந்த பரபரப்பான உலகத்திலும் எப்படி ஒரு பாமரன் ஒரு யுகம் தாண்டி நிற்பார் / நிற்கிறார் என்று யோசித்த போதுதான்
நினைவுக்கு வந்தவர் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

அவரின் கவிதைகளும் அதன் அனுகுமுறையும்
ஒரு இயல்பான ஜீவ நதியில் சலனமில்லாமல் பயணிக்கும் சர்வ வல்லமை படைத்த நீரின் சக்தியைக் காண முடிகிறது...

தூர்
*********************
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி ,
கட்டையோடு உள்விழுந்த
துருபிடித்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர் ,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே .

சேறுடா.... சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க
யாருக்கு மனம் வரும் ?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள் .
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க .
*********************

இந்த கவிதையில் வார்த்தை ஜாலங்களோ ஒரு கற்பனை குதிரைகளோ இல்லை மாறாக வாழ்வியலின் நீள் வட்டப் பாதையில் வரிக்கு வரி உண்மைகளும் நிஜங்களும் அதன் வலிகளும் பயணிக்கின்றன...

பாழாய் போன மனதை சுத்தம் செய்யாமல் பாழுங் கிணற்றை சுத்தம் செய்யும் மனிதத்தை மந்திரம் போல ஓதி விட்டுப் போகிறது வரிகள்...

பள்ளி
*********************
தண்டவாளத் துண்டு
காற்றில் ஒலியெழுப்ப
ஆரம்பம் அதன் இயக்கம் .

''நீராரும் கடலுடுத்த ''
பாடத் தொடங்குகையில்
டியூஷன் எடுத்த களைப்பில்
கொட்டாவிவிடும் வாத்தியார்கள் .

மரபெஞ்சில் பெயர் செதுக்கி
முத்திரை பதிக்கும் மாணவர்கள்

இன்ஸ்பெக்ஷனுக்காய்
வாங்கிய கட்டுரை நோட்டு
அடுத்த மாதம் எடைக்கு வர
அட்டையுடன் காத்திருக்கும்

பாடத்தில் இல்லாத
பாலியல் கல்வி
பாத்ரூமில்

யாரும் மெனக்கெடாமலே
வருடம் தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும்..
*********************

பிற உயிர்களை நேசி என்று எல்லா மதமும் சொல்லிய பின்பும் மனிதன் இன்னும் மதத்தை மட்டுமே நேசிக்கிறான் அதிலும் படித்தவரும் படிக்காதவரும் இதில் ஒரே நிலையில் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் பள்ளிகள் யாரை உருவாக்குகிறதென்று...

இப்படி ஏகப் பட்ட உள்ளீடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் இந்த கவிதையில்... இந்த கவிதை இன்னும் நூறு ஆண்டுகள் சென்றாலும் அதன் பொருளோ உணர்வுகளோ மாறவே மாறாது...

எந்த ஒரு படைப்பும் இப்படி காலம் கடந்தாலும் அந்த விஷயத்தை அப்போது படித்தாலும் அது உண்மையாகவே இருப்பின் அது சிறந்த வரிசையில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்...

"உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்..."

வெட்கம் பற்றிய அனைத்து வகையான இலக்கியத்திலும் கவிதையிலும் பெண்ணே பெரும்பாலும் பாடு பொருளாகி விட்ட நிலையில் ஒரு ஆணை வைத்து எழுதியிருப்பதுதான் இந்த கவிதையின் வெற்றி...

எல்லோரும் சொல்வதையே நாம் வேறு விதமாக சொல்வதை விட்டு சொல்லப் படும் பாடு பொருளையே மாற்றும் யுக்திதான் ஒரு கவிதையையோ அல்லது ஒரு கவிஞனையோ அடையாள படுத்தும்...

இதே யுக்திதான் கீழே உள்ள ஹைக்கூவிலும்...

"சிறகுகள் உதிர்ந்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை"

பொதுவாக கூண்டை விட்டு வெளிவரும் பறவைகளுக்கு விடுதலை என்றுதான் போட்டிருக்க வேண்டும் மாறாக கூண்டிற்கு விடுதலை என்று முடிக்கிறார்...

ஒரு கவிஞரின் சிந்தனை வேறொரு புதிய திசையில் பறக்கும் பறவையாக இருக்க வேண்டும்...
புதிய சட்டியில் பழைய கஞ்சியை குடிப்பதற்கு பதில்
பழைய சட்டியிலும் புதிய கஞ்சியைக் குடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்...

அதே போல பாடு பொருளும் எல்லாமும் பாடி தீர்த்த காதல், கண்ணாமூச்சி, நிலா, சூரியன், வறுமை மற்றும் இன்ன பிற பாடு பொருள்களை தேர்வு செய்வதற்கு பதில் கீழே உள்ள கவிதையில் எடுத்துக் கொண்டதை போல பல புதிய பாடு பொருளில் எழுத / எழுதி பழகுவதும் தனக்கென ஒரு அடையாளத்தை தேடித் தரும்...

''பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்...''

நேரடியாகவே அர்த்தம் இந்த ஹைக்கூவில் இருந்தாலும், ரசிக்கும் படி தெரிந்தாலும் அதில் இன்னொன்றும் ஒளிந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.. அதுதான் நமது வாழ்க்கை...

நாம் தனிமையில் நமக்குள்ளே உள்ள மனக் கண்ணாடியை வைத்து நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் போதுதான்
நாம் யாரென்ற முகத்திற்கு முகவரி தேடிக் கொள்ள முடியும் என்பதாக....

எப்போதும் ஒரு உயரம் என்பது குள்ளமானதை மட்டுமே வைத்து மதிப்பிடுவதல்ல...
உயரம் எப்போதும் உயரமாகவே இருக்கும் அது இன்னொரு உயரம் அருகில் தெரியாதவரை...

அப்படியே தெரிந்தாலும் அது குட்டையாகி விடாது அது நேற்றைய உயரமாகி விடும்....

வாழ்கையும் அப்படியே... நாம் எழுதும் கவிதையும் அப்படியே...

அநியாய அத்தியாயங்களின் ஆலாபனைகளை அடுக்கி வைக்கும் இசைக் குறிப்புகளாகவும் இருக்க வேண்டும்..
உடைக்கப் படாத மானுட உண்டியல்களை ஊடுருவிச் செல்லும் சில்லரைகளாகவும் சிதற வேண்டும்...
வாழ்வியலின் வானத்தில் வட்டமிடும் நிலவாகவும் நீந்திக் கொண்டிருக்க வேண்டும்...
வலிமிகுந்த சமூகத்தை வலிமை மிகுந்ததாக மாற்றும் யுக்தியையும் ஏந்திக் கொண்டிருக்க வேண்டும்..

கவிதையில் அத்தனை வகையெல்லாம் இல்லை கவிதை என்ற ஒரு வகையைத் தவிர...
கவிதையை கவிதை மொழியில் எழுதுவதே அதன் சிறப்பு... அவ்வளவே...

அது என்ன வகையில் எழுதுகிறோம் என்பதை விட எப்படி எழுதுகிறோம் என்பதே முக்கியம்...

ஒரு படைப்பின் வீரியம் படைத்தவரை சென்று சேரக் கூடாது மாறாக
அதை படித்தவரை சென்று சேர வேண்டும்...

எந்த மொழியாக இருந்தாலும் புரியாமல் எழுதுவதுதான் கவிதை என்று சில மூடர்கள்
தப்பு தப்பாய் தாளம் போட்டுக் கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் சென்று சேரும் மொழி நடையில் ஒரு படைப்பை
படைக்கும் போதுதான் அது யுகங்களைத் தாண்டி நிற்கும்...

அந்த வரிசையில் கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதைகள் யுகங்களை தாண்டியே சிறகடிக்கிறது...
இதில் அவரின் திரை துறைப் பற்றியெல்லாம் நான் சொல்ல வருவதே இல்லை...
அவர் எழுதிய கவிதைகளை மட்டுமே உங்கள் பார்வைக்கு கொடுத்தேன்...

ஒரு கவிஞரின் சிறகுகள் எத்தனை எல்லைகளைத் தாண்டி பறக்கிறது என்று அவரின் படைப்புகள், பாடு பொருள்களை வைத்தே மதிப்பிட்டு விடலாம்... அந்த வகையில் இந்த கவிதைகளை வைத்தே நீங்களும் அவரை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் கீழே உள்ள கவிதையையும் படித்து...

''நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்
மூன்று
உங்களிடம் படிக்க கொடுக்கிறேன்...''
***************************************

ஒரு நல்ல கவிஞரை பற்றி எழுத/பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தோழர் கவித்தாசபாபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

மீண்டும் சந்திப்போம் / சிந்திப்போம்...
நேசத்துடன்,
ஜின்னா.

எழுதியவர் : ஜின்னா (4-Jun-15, 2:16 am)
பார்வை : 560

மேலே