தண்ணீருக்கு கண்ணீரில் ஒரு கடிதம்

தண்ணீருக்கு கண்ணீரில் ஒரு கடிதம்....

அன்பான தண்ணீருக்கு
கண்ணீரில் என் கடிதம்....

உன் நலமறிய ஆவல்
உன் நலத்தில்தானே
எங்களின் நலமே
ஏன் உணர மறந்தாய்..??

நீயே நலிவுற்றால்
நாங்கள் எங்கே செல்வது..??

இறுமாப்புடன் தலை நிமிர்ந்திருந்த
எங்கள் வீட்டுக் குடங்கள்
தலை கவிழ்ந்து கிடக்கிறது...

விரைவினில் வா
குடங்களின் தலை நிமிரட்டும்....

வசதி படைத்தவன் இல்லத்தில்
பணத்தை உன்னைப் போல் செலவழிக்கிறார்கள்

ஏழை எங்கள் இல்லங்களில்
பணத்தையும்
உன்னைப் போல்தான் செலவழிக்கிறோம்...

இப்போதெல்லாம் சந்தையில்
நீ நன்றாகவே விலை போகிறாய்
அரிசி பருப்பிற்கே பணப்பற்றாக்குறை
நாங்கள்
உனக்கெங்கே ஒதுக்கீடு செய்வது..??

இலவசமாய் மிக்சி கிரைண்டர்
வீட்டில் ஓரமாய் கிடக்கிறது
அரைப்பதற்குத்தான்
உன்னைத் தரவில்லை....

ஜீவ நதியாய்
நீ போதைப் பொருளில் மட்டும்
தாராளமாய்... விளங்கா புதிராய்...

வானக் கூரைக்குள் முடங்கிவிட்டாயா..??
கார்மேக விமானமேறி
பூமிக்கு ஊர்கோலமாய்
எப்போது வரப்போகிறாய்..??

கங்கையிலும் கர்நாடக காவேரியிலும்
களிப்பு நடனமிடுகிறாயாமே.??
அரசியல் கயிற்றில்
கட்டுண்டு கிடக்கும் நீ
எப்போது கட்டறுத்து, கரைபுரண்டு
எங்கள் நாடு வரப்போகிறாய்..??

இதோ
உன் வருகைக்காக
காத்திருந்து... காத்திருந்து...
பூத்துவிட்ட விழிகளில்
கிணறு வெட்டியிருக்கிறது கவலைகள்..!!

சூரிய ராட்டினத்தில்
ஆவி வாளி கொண்டு
இறைத்துக் கொள்
எங்களின் கண்ணீரை...

கண்ணீரை தாரை வார்த்து
தண்ணீர் உன் வருகைக்கான
காத்திருப்பினில்...

விரைவினில் வந்து சேர்...

கண்ணீருடன்....

(குறிப்பு : 26-09-2015 அன்று இலக்கியச் சோலை மாத இதழ் நடத்திய கவி அரங்கினில்
முதல் பரிசினை வென்ற கவிதை. தலைப்பினை தந்து எழுத பணித்த ஆசிரியர்
சோலைத் தமிழினியன் அவர்களுக்கு என் நன்றிகள். கவிச்சுடர் கார்முகிலோன்
அவர்களின் பரிசினை திரைப்பட பாடலாசிரியர் நிகரன் அவர்களிடமிருந்து பெற்றபோது
மிகவும் மகிழ்ந்தேன்)

எழுதியவர் : சொ.சாந்தி (3-Oct-15, 8:09 pm)
பார்வை : 210

மேலே