காட்சிப் பிழைகள் - 16 - காதலாரா

காட்சிப் பிழைகள் - 16 - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுழன்று சுற்றும் வெளியில்
பார் செதுக்கும் விழியால்
எனை யாரென ...பார் ...
அது காதல் யுக வேர் ...

குறுகிக் கிடக்கும் உன்னிடை
திருகிச் சிவந்த என்விரலில்
பெருகி அவிழும் வரிகளை
பருகி மடிந்தது நம்மிதழ்...

பிரிவின் பின் ..திரையில்
விரியும் முத்த முடிவில்
உன் மொத்த உருவத்தால்
ஓங்கி அறைகிறாய்
என்னிரு கன்னம் வீங்க ...

தேகத்தின் ரோமத்தில்
மோகத்தின் வேகத்தை
வானத்தின் கோபமாக்கி
பாலைவன தாகத்தில் சுடுகிறாய்...


உனக்கான கவிதைகளை..
படிக்காமல் புதைப்பதை விட ..
என்னுடல் புதைக்கையில்
ஏதேனும் எழுதி விடு
ஏதேன் தோட்டம் மீட்க ...

உன் நினைவோடு மோதி
உடையும் என் மூளையில்
நரைத்துக் கிடக்கும் நியூரானும்
உளவியல் நோயெனத் திரியுதடி ....

பறவைக் கொத்திச் சிதறிய
படிமத்தின் பக்கத்தில்
படித்துறங்கும் பிம்பமென
முன் ஜென்ம புலவிகளை
குருதி குளத்தில் எறிகிறாய்

சலித்துப் போன சாத்தானின்
சரித்திரச் சாபங்களால்
தந்திரக் கடவுள் கருகட்டும்
காதலை முறிக்கும் முடிவுகளில்...



உன்னுதடு வரிகளில்
உச்ச கவி உதிர்ந்தப் பின்
உயிர் உரித்த உடலருகில்
நிமிரா நிழலின் யாகம் நீ ...

தத்துவச் சரடில் ..காதலின்
உயிர் நரம்புகளை இறுக்கி
பால்வெளியைச் சுருட்டி ..பின்
எதைப் படைப்பாய் காதலுக்கு .....

புடவியின் விதி தகர்ந்த
கிரக உருவ மலை நுனியில்
என் தாந்திரீக தியானத்தில்
உன்னுடை...தவத்தின் நெறி ....

கீறும் நகத்தில் சதை மெல்ல
சீறும் காதலில் பிழை வெல்ல
மீறும் வலியில் எதைச் சொல்ல
போதும் ...வா எனைக் கொல்ல


கடலின் கதவு திறந்து
தொலைந்த தமிழ் தேடலில்
ஊடலில் உறுமும் உனதுக் கதை
கண்டம் யாவிலும் காவியமாகும்
எழுதியது யாரெனத் தெரியாமல் ...

நாமிறந்த இதிகாச இடுகாட்டில்
உன் முதுகு பெரும் ஏடு...
மரணம் எதிர்த்த நம் பாட்டில்
அகிலம் பரிணாம சிறு கோடு...

வெண்ணிற பனித்திரை சூழ
கல்லிடுக்கில் கழன்றுக் கத்தும்
என்னுயிரை ஊட்டி உனையெழுப்ப
எக்கடவுள் காதலுயிர் விற்பவன் ...

கட்டையில் அடுக்கி அழுது
எரித்துப்... பிணமெனக் கடக்க
போர்முனைக் காதலென்பது
வெறும் மனிதம் மட்டுமல்ல ....

- காதலாரா

எழுதியவர் : இராஜ்குமார் ( காதலாரா ) (27-Dec-15, 12:21 am)
பார்வை : 516

மேலே