வேறு நிலாக்கள்-6 - நிலாகண்ணன்

---சாப்பறை---

சுவாசத்
துவாரங்களில்
பஞ்சடைக்கப்பட
காய்ந்த விறகில்
காத்திருந்தது
சிதைக்கான வெந்தழல்.!

பறையொலி
சுதியில் பாடை
ஆடியது
ஒரு நதியலையாய்.

பறையே.....
நீதான்
ஆடைப்பயணத்தின் முடிவு.
ஆத்மப்பயணத்தின் துவக்கம்.

உன்
இசைக்குறிப்புகளில்
வழியனுப்புதல்
மட்டுமே
வரையப்பட்டிருக்கும்.

இதுவரை யாரும்
மீட்டாத
ஒரு நரம்பை
இறுதி யாத்திரையில்
இறந்தவனில்
மீட்டிவிடுகிறாய்.!

இதழ் உதிரும்
மலர்மாலைகளில்
யாரும் விரும்பாத
தேன் ஸ்வரம்.

சகிக்கமுடியாத
உண்மையை
சத்தமாய்
சொல்லிவிடுகிறாய்.

சதைவடிவான
வாசகத்தின்
இசைவடிவான
முற்றுப்புள்ளி.

நிரந்தரமில்லாத
வாழ்க்கையை
வார்த்தைகளற்றுப்
பாடுகிறாய்!
இனிக்
காணக்கிடைக்காதவன்
காதுகளற்றுக் கேட்கிறான்.!

வீட்டிலிருந்து
புறப்பட்ட
சப்தமும் சரீரமும்
தூரத்தில் போய் மறைந்துபோகிறது.

ரசிக்கமுடியாதவனுக்கு
இசைக்கப்படுவதே
இந்த
வாத்தியத்தின் சோகம்.

மரணத்தை
தப்புக்குச்சிகள்
சரியாய்ப்பாட
செத்துப்போவது
எத்தனை அழகு.!

என் சாவுக்கு
பறையொலி சிந்தும்
மாடுகளை
யார்மேய்ப்பது இப்போது.?

நானுமொரு நாள்
பாடைநாயகனாக..

பறையொலி எவர்க்கு
க(வி)தைகளாகும் அப்போது?


- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலா கண்ணன் (24-Jan-16, 7:58 am)
பார்வை : 261

மேலே