கூட்டு குடும்பம்

ஒரு கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் வந்து இருந்தனர். வீதிக்கு வீதி தமுக்கு அடித்து அனைவரையும் மந்தைவெளிக்கு வரச் சொன்னார்கள். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக மந்தைவெளியில் இருக்கும் ஆலமரத்தடியில் ஒன்று கூடினர்.

ஒரு அதிகாரி.பேசத் தொடங்கினார். அதாவது யார்யாருக்கு சொந்தமாக வீடு இல்லையோ, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள கூலித்தொழிலாளர்கள், விதவைகள், ஊனமுற்றோர்கள் போன்றோருக்கு அரசு சொந்தமாக வீடு கட்டித்தர முன் வந்துள்ளது என்று கூறினார். மேலும் அதற்கான மனுக்களைக் கொடுத்து பூர்த்தி செய்து தரச் சொன்னார்.

மேற்கூறிய அனைவரும் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் ராசு மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் குடும்பத்து ஆண்கள் கூட வரிசையில் நின்றிருந்தனர்.

ராசு வராததைக் கண்டு ஊர்ப் பெரியவர் ஒருவர் நீ மட்டும் ஏம்ப்பா வரிசையில் நிற்கவில்லை, உன் பெரிய குடும்பத்திற்கு ஒரு சின்ன சொந்தவீடு கூட கிடையாதே என்று கேட்டார். ராசு ஒருமுறை அவரை ஆழமாக பார்த்தான். பிறகு பேசத்தொடங்கினான்.

பெரியவரே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, ஆனாலும் அரசு தரும் அந்த வீடு எனக்கு வேண்டாம், ஏனெனில் எங்கள் குடும்பம் ரொம்பப் பெரியது. எங்கள் தாத்தா, பாட்டி, பெரியப்பா, அப்பா, சித்தப்பா, மூவரின் குடும்பமும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றோம்.

எங்கள் குடும்பத்திற்கு வந்த மருமகள்கள் கூட எங்களைப் பிரிக்க நினைக்கவில்லை. இன்றும் பலரும் போற்றும்படி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் கூலித்தொழிலாளிகள்தான், வாடகை வீட்டில்தான் இருக்கிறோம்,

சொந்த வீட்டிற்கு ஆசைப்பட்டு அரசு கொடுக்கும் வீட்டிற்கு சென்றால் எங்கள் கூட்டுக்குடும்பம் பிரிந்து விடும். அரசு என்ன கூட்டுக்குடும்பக்களுக்கான சற்று பெரிய வீடாகவா கட்டித்தருகிறது?

எங்கள் குழந்தைகள் கூட இந்த பிரிவை தாங்க மாட்டார்கள். அதனால்தான் நான் வரிசையில் நிற்கவில்லை என்று கூறினான்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ராசுவின் குடும்பத்திற்கு இதைக்கேட்டு சவுக்கால் அடித்தது போல் இருந்தது. வெட்கி தலை குனிந்து வரிசையை விட்டு விலகி வந்து ராசுவை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டனர்.

சொந்த வீட்டிற்கு ஆசைப்பட்டு ஒரு நிமிடம் அனைத்தையும் மறந்துவிட்டோமே என்று புலம்பினர். உன்னைப்போல யோசிக்கத் தவறிவிட்டோம்.இன்னும் அதிகப்படியாக உழைத்து நமக்கான சொந்தவீட்டை நாமே கட்டுவோம் என்று உறுதி எடுத்தனர்.

இதைப்பார்த்த கிராமமே வியந்தது. வரிசையில் நின்ற பல கூட்டுக்குடும்பத்தினரும் வரிசையை விட்டு விலகினர். இதைப் பார்த்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர். அதிசயித்தனர்

கூட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும்
சேர்ந்து வாழ நினைக்க விட்டாலும்
அந்த குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு
அந்த விருப்பம் இருந்தால்
அவர் குடும்பத்தில் உள்ளவர்கள்
பிரிந்து செல்லாமல் பார்த்து கொள்வார் !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Mar-17, 12:57 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : KOODDU kudumbam
பார்வை : 1818

மேலே