சுருக்கப் பதிப்புக் கலாச்சாரம், ஏன் இங்கே தழைத்தோங்கவில்லை

ஆங்கிலத்தில் சுருக்கப் பதிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஆங்கிலத்தில் எழுதப் பட்ட சிறந்த புனைகதை, நாடக இலக்கியங் களின் சுருக்கப் பதிப்புகள் மட்டுமல்லாமல் உலக இலக்கியங்களின் சுருக்கப் பதிப்புகளும் அங்கே தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

உலக இலக்கியங்கள் பலவும் அளவில் பெரியவையாக இருப்பதுடன் அவற்றில் பலவற்றைச் சிறுவர்களால் நேரடியாகப் படிக்க முடியாது. ஆனால், அவற்றைச் சுருக்கி, சிறுவர் மொழியில் சொல்லும்போது அவர்களை ஈர்க்கக் கூடிய ஏராளமான அம்சங்கள் அந்த இலக்கியங்களில் இருப்பதால் சிறுவர்களின் வாசிப்பும் கற்பனைத் திறனும் மேம்படுகின்றன.

ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் டுவைன், ஜோனதன் ஸ்விஃப்ட், டேனியல் டீஃபோ போன்றோரின் புகழ்பெற்ற பல இலக்கியப் படைப்புகள் சுவை குன்றாமல் சுருக்கமான பதிப்புகளாக ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தமிழிலும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பு ‘ராபின்சன் குரூசோ’, ‘ஆலிவர் ட்விஸ்ட்’ போன்ற புகழ்பெற்ற நூல்களுக்குச் சுருக்கப் பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஆங்கிலம் அறிந்திராவிட்டாலும் இதுபோன்ற சுருக்கப் பதிப்புகளைப் படித்தே மேலை இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டவர்கள் அக்காலத்தில் பலர். ஆனால், அது போன்ற மரபு இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது வருந்தத் தக்கது. இதிகாசங்களுக்கு மட்டுமே தொடர்ந்து சுருக்கப் பதிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மேலை இலக்கியங்களை மட்டுமல்ல இந்திய, தமிழ் இலக்கியங்கள் பலவற்றுக்கும் சுருக்கப் பதிப்புகள் கொண்டுவந்தால் ஆறாம் வகுப்பு அளவிலேயே மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை நாம் அறிமுகப்படுத்த முடியும். இந்திய அளவில் பிரேம்சந்த், முல்க் ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயணன், தாரா சங்கர் பானர்ஜி, வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரம் பிள்ளை போன்றோரின் படைப்புகளுக்குத் தமிழில் சுருக்கப் பதிப்புகள் கொண்டுவரலாம். தமிழிலும் ஏராளமான படைப்புகள் இருக்கின்றன.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை எழுதப்பட்டிருக்கும் பெரும் தமிழ்ப் படைப்புகளுக்கும் எளிமையான, சுருக்கப் பதிப்புகள் கொண்டுவரலாம். மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி, கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஹெப்சிபா ஜேசுதாசன், தோப்பில் முகம்மது மீரான், பூமணி போன்ற பல எழுத்தாளர்களின் நாவல்களுக்குச் சுருக்கப் பதிப்புகள் கொண்டுவரலாம்.

சுருக்கப் பதிப்புகள் என்பவை பெரிய சாத்தியங்களைக் கொண்டிருப்பவை. இலக்கியங்களுக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் இடைவெளியைக் குறைப்பவை. சுருக்கப் பதிப்புகளின் இத்தகைய சாத்தியங்களை எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

எழுதியவர் : (24-Jun-17, 4:51 pm)
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே