சிறுகதை

தேடி வாங்கிய தீங்கு
(சிறுகதை)
“சார்”

குனிந்து ஏதோ பைலில் மூழ்கியிருந்த ஜென்ரல் மேனேஜர் சசிதரன் தலையைத் தூக்கிப் பார்த்து, புருவ உயர்த்தலில் “என்ன?” என்று கேட்டார்.

“உங்களைப் பார்க்க யாரோ ஒருத்தர் வந்திருக்கார்...ரூமுக்கு வெளியே வெய்ட் பண்ணிட்டிருக்கார்” ப்யூன் ரங்கசாமி பவ்யமாக சொன்னான்.

“யார்ன்னு கேட்க வேண்டியதுதானே!” ஜி.எம். தன் வழக்கமான பாணியில் கடுகடுப்பாய்க் கேட்டார்.

“கேட்டேன் சார்...ஏதோ பர்ஸ்னல் மேட்டராம்...உங்ககிட்டதான் பேசணுமாம்.”

“ப்ச்!” என்றபடி எதிர் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “சரி..வரச் சொல்லு” என்றார்.

வந்தவனுக்கு சுமார் இருபத்தொன்பது வயதிருக்கும். நல்ல சிவப்பு நிறத்தில், “வெட..வெட” வென்று உயரமாயிருந்தான். பால் மணம் மாறாத முகத்தில் பளபளக்கும் சேவிங் பச்சை. சின்ன அழகு “நற்க்” மீசை, பெண்களுக்குரியன போன்ற செந்நிற உதடுகள்.

“ஸாரி...ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் சார்...என் பேர் சிவா...சிவக்குமார்!...ஆர்.எஸ்.புரம் பிராஞ்ச்...ஸ்டேட் பாங்க்ல ஒர்க் பண்ணறேன்!...போன வாரம் ஹிண்டுல மேட்ரிமொனியல் பகுதியிலே “மணப்பெண் தேவை”ன்னு விளம்பரம் குடுத்திருந்தேன்!...அதுல “நளினி”ங்கற ஒரு பெண்ணோட அப்ளிகேஷனை நான் செலக்ட் பண்ணியிருக்கேன்!...அந்தப் பெண் உங்க ஆபீஸ்ல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல ஒர்க் பண்ணறாங்க” பேசும் பொது அவன் முக பாவமும், அழகான வாயசைப்பும், நாசூக்கான வார்த்தைப் பிரயோகங்களும் அவன் மேல் ஜி.எம்.சசிதரனுக்கு ஒரு வித அபிப்ராயத்தை ஏற்படுத்த,

“சொல்லுங்க சார்...நான் என்ன ஹெல்ப் பண்ணனும் உங்களுக்கு?” கேட்டார்.

“அந்தப் பெண் பற்றிய விபரங்களை உங்க மாதிரியான ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கற பெரிய மனிதர் மூலமாத் தெரிஞ்சுக்கிட்டு...அதுக்குப் பிறகு முடிவெடுக்கலாம்ன்னு இங்க வந்திருக்கேன்...நீங்க என்னைத் தொந்தரவா நினைக்கலேன்னா...அந்தப் பெண் பற்றிய உங்க ஒப்பீனியனைச் சொல்லலாம்!”

மெலிதாய்ச் சிரித்த ஜி.எம்.சசிதரன் காலிங் பெல்லை அழுத்தி ப்யூனை வரவழைத்து “இரண்டு காபி” ஆர்டர் செய்தார்.

காபி வருவதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேக வேகமாய்ப் பேசினார். அவர் பேசி முடிக்கையில் அந்த சிவாவிற்கு முகம் வெளிறிப் போயிருந்தது. பிறகு...ஆபீஸில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுக்கும் அந்தப் பென்ணுக்கும் இடையில் ஒரு காதல் காவியம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்கிற உண்மையை ஒரு ஜென்ரல் மேனேஜர் வாயால் கேட்டுத் தெரிந்து கொண்டபின் அவன் முகத்தில் என்ன..தவக்களையா வரும்?

“ஒ.கே.சார்...எனக்காக உங்க நேரத்தை செலவழித்து ஒரு மாபெரும் சரிவிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி சார்” சொல்லி விட்டு அவன் எழ,

காபி வந்தது.

மீண்டும் அமர்ந்து அதை பருகி விட்டுச் சென்றவனிடம் மறக்காமல் மொபைல் எண்ணை வாங்கி கொண்டார் ஜி.எம்.சசிதரன்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

ஜி.எம்.சசிதரன் மகள் பவித்ராவைப் பெண் பார்க்க வந்திருந்த சிவா என்கிற சிவகுமார், தன்னுடன் வந்திருந்த தாய் தந்தையரிடம் அந்த ஜி.எம்.தனக்கு செய்திருந்த மாபெரும் உதவியைப் பற்றிக் கூறி விட்டு, அவருடைய மகளை மணப்பதில் தனக்கு முழுச் சம்மதம் என்பதையும் நெகிழ்வுடன் கூறினான்.

நாள் குறிக்கப்பட்டு....மண்டபம் முன் பதிவு செய்யப் பட்டு....எக்ஸ்பிரஸ் வேகத்தில் திருமண வேலைகள் நடந்தேற...

நகரின் மத்தியிலுள்ள அந்த ஆடம்பர மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது.

ஜி.எம்.சசிதரனின் அலுவலக ஸ்டாப்கள் வரிசையாக மணமக்களுக்கு வாழ்த்தையும்...பரிசுப் பொருளையும் அளித்து விட்டுச் செல்ல, தன் முதுகுக்குப் பின்னால் நிகழ்ந்து முடிந்த ஒரு சதி நாடகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவளாய், தானும் ஒரு பரிசுப் பொருளுடன் சென்று வாழ்த்தி விட்டுச் சென்றாள் அப்பாவி நளினி.

பத்து மாதங்களுக்குப் பிறகு,

அலுவலகத்தில் எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே நுழைந்த நளினி, தன் பக்கத்து சீட் சுமதியிடம் கேட்டாள்.

“உனக்கு விஷயமே தெரியாதா?...ஜி.எம்.சசிதரனோட மாப்பிள்ளை ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆகியிருக்காராம்....ரெண்டு கிட்னியும் ஃபெயிலியராம்!”

“அடக் கடவுளே!...இப்பத்தானே கல்யாணம் ஆச்சு!”

“ம்...ஜி.எம்..பொண்ணு வேற மாசமாயிருக்காம்!....வாழ்க்கைல விதி எப்படியெல்லாம் விளையாடுது பாத்தியா நளினி!” அந்த சுமதி அங்கலாய்த்தாள்.

ப்யூன் ரங்கசாமி பரபரப்பாய் ஒடி வந்தான்.

“ஜி.எம்.மோட மாப்பிள்ளை இறந்திட்டாராம்!”

“ஆண்டவா!...வாழ வேண்டியவங்களை வாழ விடாம அல்பாயுசுல அழைச்சுக்கற உன்னோட செயலை நீ நிறுத்தவே மாட்டியா?”

(முற்றும்)

எழுதியவர் : முகில் தினகரன் (10-Dec-12, 10:37 am)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 252

மேலே