எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 

6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.

இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது. 

இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக  அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. 

கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.


"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க 
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே 
சீரிய கட்டமதில் தடயம் காண்"

ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ;    18/9 = 2
                                        21 -> 2+1 = 3 ; 21/3 = 7

"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"

கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
         -> 8820 - 0288 = 8532
         -> 8532 - 2358 = 6174

கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன்.  கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை  நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து. 

வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும். 

ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன். 

தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக  வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.

மேலும்


மேலே