வீரசிந்து

ஒன்றுகூடி நின்று வீரசிந்து
பாடுவோம் - வெற்றி
சூடுவோம்
நேர்மையற்ற பேர்கள்வீழ நின்று
வாட்டுவோம் - நீதி
நாட்டுவோம்

ஈரமற்ற நெஞ்சுகொண்ட
ஈனர் மாய்கவே
ஏழையை மிதித்துவாழும்
எத்தர் வீழ்கவே!
கோழைஎன்று நம்மைஎண்ணும்
கொள்கை போக்குவோம் - கிளர்ச்சி
கொண்டு தாக்குவோம்
கூடிநின்று கொடியுயர்த்திக்
கொட்டி முழக்குவோம் - செல்வர்
கொட்ட மடக்குவோம்
தோழர்காள்! - துணிந்த
வீரர்காள்!!

சூழ்ச்சியால் நமைக்கெடுத்த
ஆட்சி வெல்லுவோம்
வஞ்சகர் செருக்கொழித்து
வாழ்க்கை எய்துவோம்
கஞ்சியில்லை என்ற சொல்லைக்
கப்பலேற்றுவோம் - செகத்தை
ஒப்ப மாற்றுவோம்
பஞ்சையென்று நம்மை எண்ணும்
பான்மை வெல்லுவோம் - புரட்சிப்
பாதை செல்லுவோம்!
தோழர்காள்! - துணிந்த
வீரர்காள்!!


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:51 pm)
பார்வை : 225


பிரபல கவிஞர்கள்

மேலே