ஓவியர் மணி ஸ்ரீ இரவிவர்மா
சந்திர னொளியை ஈசன்
சமைத்தது அது பருக வென்றே
வந்திடு சாத கப்புள்
வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே
படைத்தனன் அமரர்தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன
இயற்றினன் வெளிய யானை.
1
மலரினில் நீலவானில்
மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகைஈசன்
இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும்வீசி
ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால்
அனைத்தையும் நுகருமாறே.
2
மன்னர்மா ளிகையில் ஏழை
மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசுவீசி
உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி
நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான்
புவிப்புகழ் போதுமென்பான்.
3
அரம்பைஊர் வசிபோ லுள்ள
அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!
செய்தொழில் ஒப்புநோக்க
விரும்பியே கொல்லாம் இன்று
விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு
அழிதலங் கறிவை திண்ணம்.
4
காலவான் போக்கில் என்றுங்
கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து
குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றிஒர்நாட்
செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம்
நவின் றிடற் கரிய தன்றோ?
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
