தமிழ் கன்னி காதல்

வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
திட்டமிட்டுப் பேசத் தெரிந்தவள்போல் பேசுகிறேன்!
கொட்டி முழக்கும் கடல்போலக்கூவுகிறேன்!
வண்ணக் கவிஞன் வலக்கரத்தில் நான்கிடந்து
கண்மயக்கம் கொண்டு கதைபேசுங் காலமிது!
நெஞ்சிற் கவலையில்லை! நீலக் கருவிழிகள்
கொஞ்சும் ஒளிமுகமும் கூராயொரு மூக்கும்
ஏலேலோ போடும் இதழ்ப்படகும் கொஞ்சம்போல்
மேலே விழுந்திருக்கும் மீசைக் கருப்பழகும்
பட்டினியால் சோர்ந்தாலும் பார்க்கப் பிடிக்கின்ற
கட்டழகு மார்பும் கவிஞனிடங் காண்கின்றேன்!
வானத் தளவு வளர்ந்திருக்கு மென் றலைவன்
மானத்தின் தோளில் மலர்க்கொடிபோ லாடுகிறேன்!
பாவை எனக்கென்ன பஞ்சம்? எனினுமொரு
தேவை யுரைப்பேன் தெரியாதா மன்னவனே...?
விண்ணின் கதிர்வெடித்து வீழ்ந்த சிறுகோளம்
தண்ணென்று மாறித் தரைபிறந்த காலத்தில்
முன்னம் பிறந்த முதல்மனிதன் வீட்டினிலே
கன்னி பிறந்தேன்.. பிறந்துவந்த காலமுதல்
நாலு திசையும் எனக்கிருந்த நல்லபுகழ்
காலம் அறியும்! வரலாறு கண்டறியும்!
செப்பேடறியும்! செதுக்கி வைத்த கல்வெட்டில்
எப்படியு மிந்த எழில்மகளின் பேர்விளங்கும்!
தென்னன் மதுரை சிறப்புடைய வஞ்சிநகர்
பொன்னி நதிபாயும் புகார் நகரம் ஈழநகர்
ஆன தமிழ்நாட்டின் அரசிநான் ஆனாலும்
சிந்து வெளிப்பரப்பும் சிறிக் கடல்பறித்த
தென்குமரி மண்டலமும் தேடிப் புதைபொருளின்
தன்மை அறிந்தவர்கள் இந்தத் தரை முழுதும்
என்னுடைமை என்றே எடுத்துரைப்பர்! முன்பெல்லாம்
மன்னரணி மாடத்தில் மாபுலவர் கூடத்தில்
சொங்கோ லிருந்த சிறப்புடைய மாளிகையில்
தங்கி யிருந்தேன்! தலைவிதியோ மன்னவரே...
பொத்தென்று வீழ்ந்தேன்...! புகழ் கெட்டுப் போனேனே!
கொண்ட முடியிழந்து கோல வடிவிழந்து
பண்டைச் சுகமிழந்த பாவி எதுசெய்வேன்?
நாலுபேர் பார்த்து நகைப்பதற்கு ஊராரின்
கேலி உரைக்கும் கிளிப்பிள்ளை என்செய்வேன்?
என்னால் வயிற்றுணவு தேடு மெழுத்தாளர்
என்னையே விற்றுப் பிழைக்கும் இழிநிலையில்
ஆரிடம்போய்ச் சொல்லி அழுவேன்? தமிழினத்தில்
வேறிடம் நான் போனாலும் வெட்கமிலாப் பாவிகள்
பிச்சையிடும் மாற்றாரின் பின்னால் அடிசுமந்து
கச்சையிலார் போலக் கடுகளவும் மானமின்றி
நாட்டை அடகுவைத்தும் நாலுநாள் சோற்றுக்கு
காட்டிக் கொடுத்தும் கதை நடத்தும் காலத்தில்
எங்க நான் போவேன்...? எளிய தமிழ்ச் சாதி
நூறுவகைச் சாதி நொடிக்கோர் புதுச்சாதி
வேறாய் உருவாக்கி வெவ்வேறாய் மோதுண்டு
தானே அழிந்து தலைசாயும் இந்நாளில்
எங்குநான் போவேன்? எதிர்கால மொன்றில்லாப்
பெண்ணின் நிலையேனோ பெற்றுவிட்டேன்... நான் பொழியும்
கண்ணீர் நதிக்குக் கரையொன்று தேறாதா?
என்றுநான் ஏங்கி யிருக்கையிலே பூமலரும்
குன்றத்தில் வந்தீர்... கொடுத்துவைத்தேன், பொய்யில்லை!
வானமழை பார்க்கும் வயலுழவர் கண்ணெதிரே
போனமழை போலப் புறப்பட்டு வந்துள்ளீர்!
வண்ணக் கரத்தால் வளைக்கின்றீர்... ஏழையின்
எண்ணம் பலிக்காமல் என்செய்யும்? நாளைக்கே
கோல முடிபெறுவேன்.. கொண்ட பழம்பெருமை
மீளப் பெறுவேன்... மிகப் பெரிய மண்பெறுவேன்!
இல்லையா மன்னவரே? என்றாள் தமிழ்க்கன்னி!
முல்லைச் சிரிப்பொன்றை மூடித் திறந்து வைத்தாள்!
நெற்றிப் பிறையின் கீழ் நின்ற புருவத்தைச்
சற்று வளைத்தாள் சரிந்த தலையோடு
காதல் விழியிரண்டில் கைபொருத்திக் கூப்பிட்டாள்!
சேதி தெரிந்து சிறகடித்து நான் போனேன்!
என்கரத்தி லாடும் இவளருகில் இன்னும்நான்
உன்னிப் பறப்பதெனில் உள்ளுணர்வே காரணமாம்!
போதை யுலகம்... புலவனுக்குப் பொன்னுலகம்
வாதை யுலகம் வலம்வந்த வேகத்தில்
கூடல் மகளின் கொதிக்குமுடல் சூட்டினிலும்
வாடும் அவளின் வரலாற்றுச் சூட்டினிலும்
நானொருவன் சூடாகி நல்ல வெறிபடைத்து
தேனமுத மங்கை தமிழ்க்கன்னி என்னுடையாள்
பட்ட துயரம் பறக்க இடிமுழக்கம்
கொட்டி நெடுவான் குலைந்து முகிற்கூட்டம்
ஓசைப் படவும் உலகம் நடுங்குறவும்
ஆசைத் தமிழ்மேல் ஆணை யுரைக்கின்றேன்...


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:40 pm)
பார்வை : 380


மேலே