வெளியேற்றம்

இன்னும்
இருவரிகள் தேவைப் படலா‘ம்
இந்தக் கவிதை முடிவதற்கு

அழைப்புமணி
அலற அடுத்தநொடி நுழைந்தவரின்
பாதங்களின் அவசரங்களில்
நசுங்கினவோ அவ்வரிகள்!

எழுதி முடித்த
எந்த வரியிடமும் எஞ்சிய இருவரிகள்
எதிர்பார்த்துத்
தாகமோ தவிப்பா ஏதும் இல்லை
"எழுதுகிறவன் பாடு அது
எதற்கு நமக்கென்றிருந்தன

நிர்வாணமாக
எனது நெஞ்சில் நீந்திக் கொண்டிருக்கும்
இருவரிகள்மேல்
தேடல் அடையாளம்
இழந்து கிடக்கும்
தருணம் தகர்ந்து போனது
"எரிவாயு தீர்ந்து போனது
சொன்னீர்களா?" என்ற என் மனைவி
சொற்களால்.

சன்னலோரம்
போய் நின்றபோது
குழாயடியில் குடங்களின் வரிசை
தெரிந்தது

பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விட்ட வேளையில்
பசங்கள் பறப்பது
தெரிந்தது
ஈ மொய்க்கும் இலந்தைப் பழ வியாபாரம்
சுறுசுறுப்பாய் நடப்பது
தெரிந்தது

அத்திமரத்தடியில்
இலாடம் அடிக்கக் கவிழ்க்கப்பட்ட
மாடுகள் மூக்கில்
நுரைதள்ளி யெழுந்த
மூச்சில் வேதனை நெடி
தெரிந்தது

அந்திப்பழம் கொத்திப்போடும்
காக்கைகள் நிறம்
துக்கம் அனுசரிப்பது
தெரிந்தது
என் கவிதை முடியத் தேவைப்படும்
இருவரிகள் தவிர
என்னென்னமோ தெரிந்தன

மீண்டும்
மேசைக்குத் திரும்பிக்
காகிதத்தில்
கண்களைக் கவிழ்த்தபோது
"நீ
தேடும் இருவரிகளே போதும்
எதற்கு நாங்கள்" என்று
ஏனையவரிகள் எழுதி வைத்திவிட்டு
வெளியேறியிருந்தது
தெரிந்தது.


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(7-May-11, 9:06 pm)
பார்வை : 278


பிரபல கவிஞர்கள்

மேலே