உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...(பொங்கல் கவிதைப் போட்டி)
மனு காலம் தொடங்கி
மக்களாட்சி காலம்வரை
அடிமாட்டுக்கென அழைத்துச்செல்லும்
மாடுகளைப் பார்க்கும்
மனப்பான்மையில் உழவர்களை
அதிகாரவர்க்கம் பார்க்கிறதே !
ஏர் பின்னது உலகம்
வள்ளுவரின் வார்த்தையை
மதிப்பிழக்கச்செய்தவர்களின்
அரசியலை அறியாது தடுக்க இயலுமோ
உழவர்களின் த்ற்கொலையை ?
வர்ணப் படிக்கட்டுகளில்
கீழ்த்தட்டில் அமர்த்தப்பட்டார்க்கு
உரியதாய் உழவு ஆனதால்தானே
அதிகாரவர்க்கத்தின் அலட்சியப் பார்வை?
கலப்பையை பிடித்தவாறு
ஏதேனும் கடவுள்கள் படம் இருக்கிறதா ?
நினைத்துப்பாருங்கள் !
நிற்கதியாய் உழவும் உழவனும் நிற்கும்
காரணம் புரியும் எளிதாய்
அதிகார மையங்களை உழவர்களின் மகன்கள்
கைப்பற்றி மாற்றும்போது மாறலாம்
அதுவரை உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலே