உழவும், உழவனும் மரணத்தின் விளிம்பில்(பொங்கல்கவிதைப்போட்டி)

ஆதவன் தொழுது ஆழ உழுததை
மாதவம் என்றே உழவர் உணர்ந்தோம் !

பசுமையான பயிர்கள் வளர்த்தோம் !
பாகுபாடின்றி உயிர்கள் காத்தோம்!

என்றும் கிடைத்ததில்லை
பயிர்க்கு உகந்தவிலை!
என்றாலும் சேற்றினில் உழைத்தோம்!
உலகின் உறுபசி களைந்தோம்!

ஊழின் வலியும் ஊழலின் வலியும்
உழவர்க்கு தந்தது
இன்று மனதில் பெருவலி !

கார்மேகம் நீர் தரவில்லை!
காவிரியும் கை கொடுக்கவில்லை!
கிணற்றினில் நீர் எடுக்க மின்சாரமில்லை!

விளைநிலங்களை வீட்டுமனைகளாக
விற்றுத்தீர்க்கும் கூட்டம்!
நாளை பசிக்கும்போது மக்களை
மண்ணைத் தின்னச் சொல்வதா திட்டம்!

உழவும் இந்த உழவனும் மட்டுமல்ல
மரணத்தின் விளிம்பினில்!
எமைச்சார்ந்து வாழும் உயிரினம் யாவும்
இன்று அந்த நிலைதனில்!

எழுதியவர் : usharani (9-Jan-13, 6:40 pm)
பார்வை : 130

மேலே