உழவின்றி உலகில்லை,,,(பொங்கல் கவிதைப்போட்டி)
உலகில் உள்ள தொழில்களிலே
உழவுத் தொழிலே பிரதானம்!
உழவு தரும் உணவால் தானே
உடலில் உயிரின் பிரயாணம்!
அணுவைப் பிளக்கும் விஞ்ஞானியும்
அண்டி வாழ்வது உழவரைத் தான்!
அகத்தை விளக்கும் மெய்ஞ்ஞானியும்
அவரின்றி வாழ்தல் இயலாது தான்!
பல தொழிலும் சிறக்க மனிதர்
வாழ்வது உழவர் இட்டிடும் உணவிற்கே!
உணவு தந்து உயிர்கள் காத்து உழவர்
அன்னையராவார் இந்த உலகிற்கே!