!!!===(((பரிசை வென்ற படைப்புகள் - பொங்கல் திருவிழா கவிதை போட்டி)))===!!!

எழுத்து தோழமைகளே!

பொங்கல் திருவிழா கவிதை போட்டி சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்தது, இதோ பரிசு வென்ற படைப்பையும் படைப்பாளியையும் கீழே பாருங்கள்.

ரூபாய் 4000 ஆயிரத்தை வென்ற படைப்பு தோழர் நிலவை பார்த்திபன் அவர்கள் எழுதியது.

1.உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆண கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குருவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!

எழுதியவர் :நிலவை.பார்த்திபன்
நாள் :2013-01-05 09:02:30

!!!===========================!!!

சிறப்பு பரிசு ரூபாய் 1500 யை வென்றது, தோழர் த. மலைமன்னன் அவர்களின் படைப்பு.

2. (உழவின்றி உலகில்லை ...! (பொங்கல் கவிதைப் போட்டி )

சில ஆண்டுக்குப் பின் ...

எங்கு பார்த்தாலும் வானுயர்
கண்ணயரும் கட்டிடக்காடு !
கண்ருசிக்கிறது அப்போதே பசிக்கிறது
அங்கு ருசிக்க புசிக்க ஒன்றுமில்லை ...!

ஐநா சபைக் கூட்டம்
அறப்போர் மறப்போர் ஆயுதச்சந்தை
அறிவாளிகளின் விவாதம் தொடங்க
அமெரிக்க அதிபர் பசியால் மயக்கம் ...!

அரசியல்வாதி தோட்ட வீடு
குவியல் குவியலாக பணம்
குதூகலம் இல்லை எவரின் கண்களிலும்
பணம் இல்லாதவர் பிணம் - இன்று
பணம் இருந்தாலும் பசியால் பிணம்
தலைவரின் இறப்பில் புதுமொழி பிறந்தது ..!

நாசா ஆராய்ச்சிக் கூடம்
மரபுமாற்ற விதைகள் கையிருப்பு
விதைக்க நிலமெங்கே - தீவிர தேடல்
வியாழனில் விதைக்கலாம்
பசி மாத்திரை போட்டுக்கொண்டு
விஞ்ஞானி தகவல் ...!

நீர் இன்றி அமையாதுலகு - உழவா
நீர் இன்றியும் அமையாதுலகு !

ஞானம் பிறந்தது எனக்கு - ஞாலத்துக்கு ?

எழுதியவர் :த.மலைமன்னன்
நாள் :2013-01-10 15:51:34

!!!=============================!!!

மேலும் சிறப்பு பரிசு 1500 யை வென்றது, திரு. கே. ரவிச்சந்திரன் அவர்களின் படைப்பு.

3. உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...(பொங்கல் கவிதை போட்டி)

மேகம் கலைஞ்சிருச்சே - இடி
மின்னல் ஒளி(ழி)ஞ்சிருச்சே
காலம் கடந்திருச்சே - அய்யோ
கருதெல்லாம் கருகிடுச்சே !

ஏத்தம் இங்கிருக்கு - ஆனா
எறைக்க எங்க நீரிருக்கு ?
பாழும் கெணறிருக்கு - அய்யோ
பாவமது வறண்டிருக்கு !

வெத நெல்லு சோறாச்சு - ஏரு
வெறுங்கலப்ப வெறகாச்சு
அழுத கண்ணீர் உப்பாச்சு - அய்யோ
அடி வயிறு நெருப்பாச்சு !

வெளையற நெலமெல்லாம் - யாரோ
வீடு கட்ட மனையாச்சு
உழுதவன் வாழ்க்க மட்டும் - அய்யோ
உத்துரத்தில் தொங்கியாச்சு!

பாதியூரு காலியாச்சு - மீதி
பஞ்சம் பொழைக்க எங்கோ போச்சு
நாதியத்து நின்ன சனம் - அய்யோ
நாக்க புடுங்கி செத்துப்போச்சு!

காலு வைக்க சேறில்லாட்டி - நீங்க
கையும் வைக்க சோறும் எங்கே ?
உழவனோட உழவும் போனா.... – அய்யோ
உலகமெல்லாஞ் சுடுகாடாச்சே!

எழுதியவர் :கே. ரவிச்சந்திரன்
நாள் :2013-01-09 17:57:36

!!!================================!!!
!!!================================!!!

மேலும் போட்டியின் முதல் கவிதையை பதிவு செய்து இனிதே போட்டியை தொடங்கி வைத்த தோழர் கவி கண்மணி அவர்களுக்கு சிறப்பு பரிசு 500 அளிக்கப்பட உள்ளது என்பதையும், இந்த கவிதை போட்டிக்கு மிகுந்த உந்து சக்தியாக திகழ்ந்த தம்பி ரவி சு அவர்களுக்கு சிறப்பு பரிசு 500 ரும் வழங்கப்பட உள்ளது.

பெண் படைப்பாளிகள் யாரும் பரிசை வெல்லவில்லையே என்று யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம், வழக்கம்போல் முயற்ச்சியை தொடருமாறு கேட்டுகொள்கிறோம், தேர்வின் முக்கால்வாசி தூரம்வரை வந்த சிறப்பான படைப்பை தந்த தோழி ரஞ்சிதா அவர்களுக்கும், தோழி ஆயிஷா பாருக் அவர்களுக்கும், ஜோசப் ஜுலியஸ் அவர்களுக்கும், மேரி ஜேசிந்தா அவர்களுக்கும் திருவிழாக்குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், இவர்களுக்கு பொங்கல் திருவிழாக் கவிதை போட்டியின் சிறந்த பெண் படைப்பாளர்களுக்கான சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

நடுவர்களின் பலகட்ட தேர்விற்கு பிறகு இந்த இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பரிசை வென்ற படைப்பாளிகள் உடனடியாக குடும்ப அட்டையில் உள்ள தங்களது பெயரையும் இல்ல முகவரியையும் உடனடியாக எனது தனி விடுகையில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் பரிசும் பட்டமும் வீடுதேடி வந்து சேரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றிகள்
திருவிழா குழு

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (16-Jan-13, 10:11 am)
பார்வை : 463

மேலே