[397] சென்றடைவதுவும் சொர்க்கம் ஆமோ?

உண்டிடக் கொடுப்பவன் கைகளை
உயர்த்திடச் செய்ததும் என்னவோ?
தொண்டினைச் செய்தவன் அடுப்புமே
தூங்கிடச் செய்ததும் முறைமையோ?

பாரெலாம் பசிப்பிணி நீக்குவான்
பட்டினி கிடப்பதை ஊக்கவோ?
நீரெலாம் நிறுத்தியே அவன்முகம்
நிலமென வெடிப்பதும் பார்க்கவோ?

பாரினுக் கென்றுழைத் திட்டவன் -வயல்
பரப்புகள் வீடென மாறவோ?
காரலாம் ஓடிடக் காடுகள் -கொன்று
கண்டநாம் கற்றதும் இல்லையோ?

ஊரெலாம் போட்டிடும் ஆட்டமே!
உழவரை மறந்தவோர் கூட்டமோ?
ஏரெலாம் பூட்டி உழுதவன்
இன்றுகண் பொத்தியே அழுவதோ?

மாட்டுக்குப் பொங்கல் வைப்பதாய்
மஞ்சுவி ரட்டினில் ஓட்டுவோம்!
நாட்டுக்குப் பெருமைகள் சேர்ப்பவர்
நன்னிலம் கெட்டுமே வீழவோ?

வண்டியைக் மாட்டினைக் கலப்பையை -விற்று
வாங்கிய விசத்தினை உண்ணவோ?
வண்ணங்கள் தீட்டிய கொம்பினைத்-தங்கள்
வயிற்றினில் வாங்கியே மாயவோ?

கல்வியாம் ஏரினைப் பூட்டியே
காட்டிய உழவுகள் பொய்த்தவோ?
செல்வமாய்ச் சேர்த்தவை என்னவோ?
சென்றடை வதுவுமே சொர்க்கமோ?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (17-Jan-13, 1:43 pm)
பார்வை : 89

மேலே