எல்லோர் பார்வையிலும் நான்..

நல்ல பையந்தான்
காலந்தான் வெல்லலை"

ஊரார் பார்வையில் நான்!

"ஊரு ஒலகத்தப் பாத்தாவது
மனுசனுக்கு புத்தி
வர வேணாமா?"
இது உறவுகளின்
பார்வையில் நான்....

"அவுக அப்பன மாதிரியே
பொழக்கத் தெரியாதவனா
இருக்கானே"
என்னப் பெத்தவளின்
ஏக்கப் பார்வையில் நான்....

"எனக்குன்னு வந்து
பொறந்திருக்கானப்பு"
நான் பொறக்கக்
காரணமான
அப்பாவோட அங்கலாய்ப்பு
பார்வையில் நான்....

"வேலிக்குள்ள
மாட்டியிருந்தாலாவது
வெடுக்குன்னு வெட்டி
எறிஞ்சுபுட்டு போயிடலாம்
நான் தாலிக்குள்ளயில்ல
மாட்டிக்கிட்டேன்"
இது.... கட்டியவளின்
ஆதங்கப் பார்வையில் நான்....

"பாவம் எங்கப்பா!
ஏமார்றதுக்குன்னே
பொறப்பெடுத்திருக்காரு"
இது என் பிள்ளைகளின்
பரிதாபப் பார்வையில் நான்...

சரியான ஆளா
வருவான்னு பாத்தேன்
ஆனா....
இப்படி சராசரியாகப் போயிட்டான்"
பாடஞ்சொல்லிக் கொடுத்த
என் பள்ளிக்கூட
வாத்தியாரின்
ஏமாற்றப் பார்வையில் நான்!

"பாம்பா பழுதான்னு
பரிசோதிச்சுப் பாக்காம
பந்தலைப் பாத்தா
படர்ற செடி கணக்கா
அவன்....
இப்பவும் அப்படியே
இருக்கான்டா"
நட்பு வட்டத்தின்
நம்பிக்கையத்துப் போன
விரக்திப் பார்வையில் நான்...

"எவ்வளவோ நல்ல
எடமெல்லாம் வந்துச்சு
அவசரப்பட்டுட்டோம்"
மாமியாரின்
பெருமூச்சுப் பார்வையில் நான்....

"உறவுன்னுதான்
ஒப்புக்கிட்டோம்
இப்படி
ஒதவாததுன்னு
தெரிஞ்சிருந்தா,
ஒதுங்கியிருந்திருக்கலாம்"
மாமனாரோட
காலங்கடந்த
விரக்திப் பார்வையில் நான்.....

"நல்லவேளை
நான் தப்பிச்சேன்"
இது கொளுந்தியாளின்
திருப்திப் பார்வையில் நான்....

இந்த மனுசன கட்டி
இழுத்து கரை சேர்க்க
முடியாதுன்னு
எல்லா மனித சங்கிலியும்
விலகி நின்னு
என்னை வேடிக்கை
பார்க்கையில

'அது'கிட்ட
நெறஞ்சு கெடக்குற
தெறமக்கி
ஒருநாளு இல்லாட்டி
ஒருநாளு
ஒலகம் பாக்குற மாதிரி
ஒசந்து நிப்பாப்புல!

என்ன ஒண்ணு...

மலையளவு
தெறமயிருந்தாலும்
கடுகளவு அதிஷ்டம்
வேணும்னுவாக....

கடுகளவுங்கிறதாலயோ
என்னமோ...

அது
கையில அகப்பட
கொஞ்சஞ் சொனங்குது

நேரங்காலம் வரட்டும்
சும்மா நிமிந்து
நிப்பாப்புல பாரு

அவரப் பெத்ததுக்கு
அவுக ஆப்பன் ஆத்தா
பெருமைப்படணும்

அதுவ கட்டிக்கிட்டதுக்கு
அவுக பொண்டாட்டி

ஏழேழு சென்மம் எடுத்து
வந்துருக்கணும்

அந்த ஆம்பிள
நெழலு பட்டாலே
யோகமுன்னு
நெனக்கிறவ நான்!

ஆனா...

அந்த சனங்களுக்கு
நெசங் கையில கெடச்சும்
அதுக மனசு
நெறயலியே

காதலிச்சுட்டு
கைவிட்டுட்டுப்
போயிருந்தாலும்
கைவிட்றாத அவளின்
நம்பிக்கைப் பார்வையில் நான்...

எழுதியவர் : நவீன் (18-Jan-13, 6:51 pm)
சேர்த்தது : நவீன்குமார்
பார்வை : 159

மேலே