சோசியம் பாக்கலையோ சோசியம்

ராணுவத்துல சேந்த மகன
நாலு வருசமா காணோமுன்னு
நாதியத்துப் படுக்கையில
நாலு நாளா கெடக்குந் தாயி...!
பதபதச்சிக் கேக்கயில
பயப்படாத வந்துருவான் - ஏழரைச்
சனிக்கு எறங்கு மொகமுன்னு
எதுத்த வீட்டுப் படியேற.....

முப்பத்தாறு வயசாச்சி
அரசாங்க வேலையிருந்தும்
ஆரும் சீண்டலையேன்னு
இளம்பபுள்ளவாத மகன்
எதிர்காலங் கணிக்கக் கேக்கும்
முனியாண்டிக் கெழவனுக்கு...........!
சுக்குர தெச தொடங்கிருச்சி..
சுடுசோறு ஆக்கிப் போட
மங்கல வெளக்கோட
மகராசி ஒருத்திவாரான்னு
அடுத்த தெரு தாண்டிப் போறேன்....

என்ன சாமி இப்பிடியாச்சி
நட்ட நாத்து கருகிப்போச்சி..
வெள்ளாமக்காடு வெறிச்சிருச்சேன்னு
வெள்ளைச்சாமி கையவிரிக்க.......!
கெரகக் கோளாருடா
ஆனி போகப் பொறுன்னு
ஆசுவாசப் படுத்திப் போறேன்........

எனக்கே தெரியலன்னாலும்
ஏதோ ஒரு கணக்கப் போட்டு
காஞ்ச மனசுக்காரவுக கண்ணீர
தொடச்சிப் போறேன்..
நம்பிக்க வெதக்கையில
சேந்தே நெறயுதுங்க
ஒட்டிப்போன என் வயிறும்....

புளுகுமூட்ட போரானுன்னு
பொறணிபேசும் ஒரு கூட்டம்....
அவுகளுக்கொரு கேள்வி...!
என்னமோ அலைகற்றையோ
ஹவாலாவாமாமுல்ல....!
அதுக்கு என்ன சொல்வீக.............?

எழுதியவர் : சரவணா (19-Jan-13, 1:33 pm)
பார்வை : 269

மேலே