அம்மாவெனும் கடவுள் !

தன் குருதி கடைந்து
என் இரத்தம் செதுக்கிய
சிற்பியே - அம்மாவெனும்
அன்பு வங்கியே - நான்
சாகவேணும் இறுதிவரை
அதனை வாங்கியே !

நான் உளரும் போதே
நா உலர - நான்
பேசுவதாய் பேசித்
திரிந்தவள் - நான்
பேசித் தெறிக்கையில்...
கேட்கவும் வேண்டுமா ?

என் உடல்நிலை
மோசமானால் - கடவுளுக்கே
சாபம் கொடுக்கும்
கோபம் வரும் - இமைக்கும்
கண்ணுக்கும் இடையே
கடத்தி, கிடத்திக் கவனிப்பாய் !

உன் இரும்புப்புரதத்தின்
இருப்பு குறைந்தது,
குறைநிறை கொழுப்புகள்
கூடிப் போயின...
வயதின் விலையாய் - நீ
வியாதிகள் பெறுகிறாய் !

மகன்களும் இருக்கிறோம்
மருந்துகளும் இருக்கிறது
கவலைகள் துடைத்தெறி !
உனக்கு தைரியம் சொல்லும்
தைரியமில்லை எனக்கு !
மீண்டு வா - தடுக்கிய பின்
சுதாரிக்கும் வினாடிகளாய்
இந்நொடிகளை கொன்றுவிட்டு !

ஒன்றுமில்லை உனக்கு
என்றொன்று மட்டும்
ஏற்றுக்கொள் - மனதளவில்
எழுந்து வா - உன் அன்பால்
என் வாழ்க்கை எழுது வா !

இறைவா...
தாக்குதல் நிறுத்து
என் தாயின் - உடல்
நலத்தை சீராக்கு,
என் கவலைகள்
போக்கும் அவளால் - எனக்கு
கவலைகள் வேண்டாமே !

கருவறையில் இருக்கும்
கடவுள்களை விட
கரு சுமக்கும்
கடவுள்கள் மேல் !

முதலாவது
உன்னை வருத்தினால்
உனக்கு கிடைப்பது !
இரண்டாவது
தன்னை வருத்தி
தனக்கு நீ வரமென வாழ்வது !
அம்மன்கள் இருக்கட்டும்
அம்மாக்கள் தொழுவோம் !

(எனது அம்மாவின் சீரற்ற உடல்நிலையால் பாசக்கடலின் சில துளிகளாய் வந்து விழுந்த வரிகளிவை...! தற்போது நலமாக இருக்கிறார்கள் !
தொலைபேசியில் நலம் விசாரித்த தோழமைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி !

இது தொடர்பாக சென்னை சென்றிருந்ததால், தளத்திற்கு என்னால் வர இயலவில்லை. தற்போது தான் தஞ்சை வந்து, ஆய்வகம் புகுந்தேன், இனி வழக்கம் போல டரியல் தொடரும் !)

எழுதியவர் : வினோதன் (21-Jan-13, 11:44 am)
பார்வை : 170

மேலே